Parrot astrologer arrested for Pmk candidate thangar bachan – TNN | தங்கர்பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது; பழிவாங்கும் திமுக


நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வேட்பாளராக  இயக்குனர் தங்கர் பச்சான் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில் அழகுமுத்து அய்யனார் கோவில் உள்ளது. அக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த வேட்பாளர் தங்கர்பச்சான் கோவில் வாயில் முன்பு கிளி ஜோசியம் பார்ப்பவரிடம் தரையில் அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்தார்.

 
அப்போது கிளி எடுத்து கொடுத்த கார்டை பிரித்து பார்த்தபோது அழகுமுத்து அய்யனார் உருவப்படம் இருந்தது. இயக்குனர் தங்கர்பச்சான் மகிழ்ச்சி அடைந்து கிளிக்கு வாழைப்பழம் ஊட்டி விட்டு கிளம்பி சென்றார். இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பரவியது.
 
இந்நிலையில் வனத்துறையினர் கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக கூறி கிளி ஜோசியம் பார்த்த செல்வராஜ் மற்றும் கோவில் வாசலில் கிளி ஜோசியம் பார்த்த இருவரை  இன்று கைது செய்தனர். 
 
வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
 
தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

 
கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
 
தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 

மேலும் காண

Source link