டேனியல் பாலாஜி மறைவு
தமிழ் சினிமாவின் பலராலும் ரசித்துக் கொண்டாடப்பட்ட பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி (Daniel Balaji), இன்று தன் 48ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் முரளியின் உறவினரான டேனியல் பாலாஜி, சித்தி சீரியலில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் ‘டேனியல்’ எனும் அடைமொழியைப் பெற்று பிரபலமானார். தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இயக்குநர் பயிற்சி பெற்று படித்த இவர், தொடர்ந்து வெள்ளித்திரைக்குப் பயணித்து தேர்ந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
கண்கள் தானம்
தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் நடித்துள்ள டேனியல் பாலாஜியின் அம்மா தமிழ், அப்பா தெலுங்குக்காரர். இறுதியாக தமிழில் அரியவன் எனும் திரைப்படத்தில் நடித்த டேனியல் பாலாஜியின் வேட்டையாடு விளையாடு சைக்கோ கதாபாத்திரம், வட சென்னை, பொல்லாதவன் கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர்களால் தொடர்ந்து சிலாகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பால் காலமான டேனியல் பாலாஜியின் கண்கள் இன்று தானம் செய்யப்பட்டது. இவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று, ஓட்டேரியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அஞ்சலி
இந்நிலையில் டேனியல் பாலாஜிக்கு நேரிலும் இணையத்திலும் ரசிகர்கள், திரை உலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒருபுறம் அவரது பழைய நேர்க்காணல்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய விருது வென்ற தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான சேரன் தான் ரசிக்கும் கலைஞன் என டேனியல் பாலாஜியின் புகைப்படத்தை முன்னதாகப் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிலாகித்த சேரன்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும்போது இயக்குநர் சேரன் பகிர்ந்த இந்தப் பதிவில், “ஒரு குளோசப் ஷாட் எடுக்கப்பட எத்தனை பேர் உழைப்பு… எவ்வளவு கூட்டத்தின் நடுவில் ஒரு நடிகன் தனது திறமையை உணர்வுகளை எந்த அச்சமும் பதட்டமுமின்றி காட்டவேண்டும், இங்கே டேனியல் பாலாஜி. நான் மிகவும் ரசிக்கும் கலைஞன். முகத்தில் காண்பிக்கும் மாற்றங்கள் ரசித்துக்கொண்டே இருக்கலாம். வளரும் கலைஞன்” என அவரது புகைப்படங்களுன் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவினைப் பகிர்ந்து தற்போது ரசிகர்கள் இணையத்தில் டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் சேரன் குறித்து தனியார் ஊடகத்துடனான நேர்க்காணல் ஒன்றில் முன்னதாகப் பேசியுள்ள டேனியல் பாலாஜி, “சேரன் சாரை எனக்கு முதலில் இருந்தே தெரியும். தவமாய் தவமிருந்து மற்றும் அவரது இன்னொரு படத்தில் என்னால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. இந்தப் படத்தில் நான் நடிக்கும்போது அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை.
ஆனால் ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துவிட்டு ஃபோட்டோஸ் எடுத்துவிட்டு, “என்னயா இவ்வளவு கும்பல வச்சிட்டு இப்படி நடிக்கிற” எனக் கூறினார். “நாங்கள் வேறு எமோஷன்ஸ் நடிக்கிறோம். ஆனால் நீ புதிதாய் ஒன்று க்ரியேட் செய்கிறாய். பரவாயில்லயே” என்று பாராட்டினார்” என டேனியல் பாலாஜி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் காண