Lok sabha Election: மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு


மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் 21 தொகுதிகளிலும் சிவசேனா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாட்டின் மிகவும் முக்கியமான மாநிலமான மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
மகாராஷ்ட்ராவில் 5 கட்ட வாக்குப்பதிவு:
நாட்டில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் மாநிலங்களில் மகாராஷ்ட்ராவின் பங்கு தவிர்க்க முடியாதது. உத்தரபிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் இருப்பது போல, மகாராஷ்ட்ராவில் 48 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. மும்பை, புனே, நாக்பூர், தானே போன்ற பெரு நகரங்களை அடக்கியது மகாராஷ்ட்ரா.
மகாராஷ்ட்ராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளை கைப்பற்ற மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. தனது கூட்டணி கட்சிகளுடனும், பா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா கூட்டணியும் போராடி வருகின்றனர். மொத்தம் 48 தொகுதிகளை உள்ளடக்கிய மகாராஷ்ட்ராவில் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
21 தொகுதிகளில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா:
அங்கு பா.ஜ.க. ஆளுங்கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அவர்களை வீழ்த்த காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியோருடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து, பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற நிலையில், தொகுதிப் பங்கீடு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவின் பெரிய கட்சியான உத்தவ்தாக்கரேவின் சிவசேனா அதிக இடங்களில் போட்டியிடுகிறது. 21 தொகுதிகளில் போட்டியிடும் உத்தவ் தாக்கரே தனது பலத்தை நிரூபிக்க போராடும். பா.ஜ.க.வும், காங்கிரசும் ஏற்கனவே சில தொகுதிகளில் தங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பு:
மகாராஷ்ட்ராவில் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி 5 தொகுதிகளுக்கும், 26ம் தேதி 7 தொகுதிகளுக்கும், மே 7ம் தேதி 11 தொகுதிகளுக்கும், மே 13ம் தேதி 11 தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஓரளவு சம அளவில் மகாராஷ்ட்ராவில் மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது.
மகாராஷ்ட்ராவின் முக்கிய கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளில் உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ள சூழலில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அடுத்து அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண

Source link