Supreme Court Warns Centre to grant permanent commission to women officers in coast guard case


பாதுகாப்பு படைகளில் ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் (Permanent Commission) எனப்படும். இதன் கீழ் பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் வரை நாட்டுக்கு பணியாற்றலாம். ஆனால், இந்த நிரந்தர கமிஷன் கீழ் ஆண் அதிகாரிகள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர்.
பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷனா?
அதேபோல, குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் ஒருவர் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இதன் கீழ் பணியல் சேரும் ஆண் அதிகாரிகள், பணிக்காலம் முடிந்ததும் நிரந்தர கமிஷனை தேர்வு செய்யலாம். அல்லது ஓய்வு பெறலாம். ஆனால், குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் பணியில் சேரும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷனில் இணைய வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு, பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், நிரந்தர கமிஷன் முறை பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை, ராணுவம் மற்றும் கடற்படையில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. கடலோர காவல்படையில் அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், கடலோர காவல்படையில் குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் பணியாற்றி வரும் பெண் அதிகாரி பிரியங்கா தியாகி, நிரந்தர கமிஷன் முறையை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மத்திய அரசை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
சாட்டையை சுழற்றிய உச்ச நீதிமன்றம்:
“பெண்களை ஒதுக்கி விட முடியாது. நீங்கள் செய்யாவிட்டால், நாங்கள் அதை செய்வோம். 2024ஆம் ஆண்டு, நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் நியாயமானதாக தெரியவில்லை. பெண்களை விட்டுவிட முடியாது. நீங்கள் செய்யாவிட்டால், நாங்கள் அதை செய்வோம். எனவே, என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்” என டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர் வெங்கடரமணி, “இதற்கு பதில் அளிக்க கோரி கடலோர காவல்படையை கேட்கிறேன்” என்றார். இதையடுத்து, வழக்கின் விசாரணை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
முந்தைய விசாரணையின்போது, ஆணாதிக்கத்துடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக விமர்சித்த இந்திய தலைமை நீதிபதி, “ராணுவமும் கடற்படையும் ஏற்கனவே இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தியிருக்கும் போது கடலோர காவல்படை மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை? பெண்கள், எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றால் அவர்களால் கடற்கரையையும் பாதுகாக்க முடியும். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. அதை இங்கு காட்டுங்கள்” என்றார்.
 

மேலும் காண

Source link