எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் – பாஜக மாநில துணைத்தலைவர் உறுதி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிந்தூர் ஆபரேசன் வெற்றியை வரவேற்க மூவர்ண கொடி யாத்திரை, மே 23-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பதாகவும், இந்த யாத்திரையில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் திமுக அரசை தூக்கி எறிவதே தங்களின் முக்கியக் குறிக்கோள் என்ற கே.பி.ராமலிங்கம், அதற்காக தேவையான அனைத்து கூட்டணிகளும் அமைக்கப்படும் என்றார். தமிழக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் இதை ஏற்கனவே அறிவித்துள்ளார் என்றும் கூறினர்.

திமுகவுக்கு ஆதரவு என பாமக கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்ற அவர், பிற கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என்றார். திமுகவின் மண்டல பொறுப்பாளர் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த கே.பி.ராமலிங்கம், சட்டமன்ற தேர்தலில் பணம் பகிர்வதற்காக முன்கூட்டியே இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.