DMK after inciting violence Wants to win – Premalatha Vijayakanth alleges | Lok Sabha Election 2024: வன்முறையை தூண்டிவிட்டு திமுக வெற்றிபெற நினைக்கிறது


விழுப்புரம்: ஆட்சி பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து வன்முறையை தூண்டிவிட்டு திமுக வெற்றி பெற நினைக்கிறது என விழுப்புரம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக. வேட்பாளர் பாக்யராஜ், கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு, ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து தே.மு.தி.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு வேட்பாளர்கள் பாக்யராஜ், குமரகுரு, கஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி ராசியான கூட்டணி, தொண்டர்கள் விரும்பிய கூட்டணி, மக்கள் போற்றும் வெற்றி கூட்டணி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் இந்த 3 பேருமே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். இவர்கள் நியாயமாகவும், தர்மத்தின் அடிப்படையிலும் கட்சியை வளர்த்தார்கள். மனிதர்களாக பிறந்து புனிதர்களாக வானுலகில் தெய்வங்களாக இருந்து நம்மை ஆசிர்வதித்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவும், தேமுதிகவும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சிகள். 2011 தேர்தலில் எத்தனையோ குழப்பங்களையும், அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கூட்டணி அமைத்தனர். அதே கூட்டணி தற்போதும் அமைந்துள்ளது.
சோகத்தில் இருந்து  என்னால் வெளியே வர முடியவில்லை
தலைவர் விஜயகாந்த் மறைந்து 100 நாட்கள்கூட ஆகாத நிலையில் அந்த சோகத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. இருந்தாலும் கூட்டணி தர்மத்தை மதித்து அண்ணன் எடப்பாடியாரின் வார்த்தையை மதித்து பிரசாரம் செய்து வருகிறேன். விழுப்புரம், தலைவர் விஜயகாந்தின் கோட்டை, அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை இத்தேர்தலிலும் நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
பாஜகவிற்கு ஒரு பெரிய பாடத்தை புகட்ட வேண்டும்
நான் என் கண்ணீரையோ, சோகத்தையோ யாரிடமும் சொல்வது கிடையாது. ரிஷிவந்தியம் தொகுதிக்கு சென்றபோது விஜயகாந்த் செய்த திட்டங்களை நினைத்து கண்ணீர் விட்டேன். விஜயகாந்த் இல்லாமல் முதல்முறையாக தமிழ்நாடு முழுவதும் செல்லும்போது மனம் வலிக்கிறது. மாநிலத்தில் ஆளும் திமுகவிற்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும் இத்தேர்தலில் ஒரு பெரிய பாடத்தை புகட்ட வேண்டும். 40-ம் நமதே என்று ஒரு சரித்திரத்தை படைப்போம். விழுப்புரம் தொகுதியில் இதுவரை இருந்த எம்.பி.க்கள் கொடுத்த வாக்குறுதிகளை செய்யாத நிலையில் தே.மு.தி.க., அ.தி.மு.க. ஒன்றாக இணைந்து செய்து கொடுக்கும் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறேன்.
எம்.ஜி.ஆர்., மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா அம்மா உணவகத்தை ஆரம்பித்து ஒரு தாயாக ஏழை மக்களுக்கு உணவளித்தார். கேப்டன் விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி அன்னதான பிரபுவாகவே வாழ்ந்தார். தற்போது கூட தலைவரை தரிசிக்க அவரது நினைவிடத்திற்கு தினமும் வரும் 10 ஆயிரம் பேருக்கு வரை அன்னதானம் வழங்கி வருகிறோம். அனைவருக்கும் தலைவர் விஜயகாந்த் செய்த உதவியையும், அன்னதானத்தையும் நிச்சயமாக நான் கடைசி வரை செய்வேன். விஜயகாந்த், எல்லோருக்கும் நேர்மை, தைரியம், உண்மையை சொல்லிக்கொடுத்தார். அதன் விளைவே லட்சக்கணக்கான தொண்டர்களின் அன்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.
வன்முறையை தூண்ட நினைக்கும் திமுக
அ.தி.மு.க., தே.மு.தி.க. இந்த இரு கட்சிகளும் மக்களுக்காக பாடுபடுகிற கட்சி. மக்களை நம்பியே தேர்தலில் களம் காணுகிறோம். ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரை ஆட்சி பலம், அதிகார பலம், பண பலத்தை நம்பியே உள்ளது. ரவுடியிசத்தை கட்டவிழ்த்துவிட்டு அதன் மூலம் வன்முறையை தூண்டிவிட்டு வெற்றி பெற நினைக்கிறது. ஆனால் நம்முடைய கூட்டணி அன்பின் பலம், உண்மையின் பலம், தொண்டர்களின் பலத்தை நம்பியுள்ளோம். ஒரு புரட்சி சரித்திரத்தை இத்தேர்தலில் தர வேண்டும். வேலையில்லாத திண்டாட்டத்தை போக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய தண்டனையை தர வேண்டும். சமையல் கியாஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு இப்படி எத்தனையோ வரிகளை போட்டு மக்களை பழிவாங்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு இத்தேர்தல் ஒரு சரியான பாடமாக இருக்க வேண்டும்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி செய்யாத ஊழலா? 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, காமன்வெல்த் ஊழல் வழக்கு இவற்றையெல்லாம் மறந்து விட்டீர்களா மக்களே? குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு சிலருக்கு மட்டுமே வழங்குகிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும்முன் ஒரு நிலைப்பாடும், ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? ஜாதியை நம்பி உள்ளவர்களும், மதத்தை நம்பியுள்ளவர்கள் யாரும் வேண்டாம், 7 பேர் உள்ள கூட்டணி வானவில் கூட்டணி. ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. என்பது 4 எழுத்து உள்ள கூட்டணி, எஸ்.டி.பி.ஐ. 4 எழுத்து. வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4-ஆம் தேதி. இது நமக்கு ராசியானது.
சிறந்த எதிர்காலம்
தி.மு.க.வினர், இத்தேர்தலில் ரவுடி பலத்தை வைத்து அராஜகம் செய்ய உள்ளனர். எனவே அனைவரும் நம்முடைய தலைவர் நமக்கு காட்டிய வழிப்படி கூட்டணி தர்மத்தோடு ஒற்றுமையாக பணியாற்றினால் நாளைய சரித்திரம் நமது கையில். அனைவரும் வாக்களித்து நமது கூட்டணியை வெற்றி பெறச்செய்யுங்கள். கூட்டணி தர்மத்தை மதிப்போம், வெற்றியை பெறுவோம். 2011-ன் வரலாற்றை மீண்டும் கொண்டு வருவோம். நமது கூட்டணிக்கு நாளைய எதிர்காலம் சிறந்த எதிர்காலமாக இருக்கும் என அவர் பேசினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Source link