ஐ.பி.எல் சீசன் 17:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டி மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
அந்த வகையில் இந்தாண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போதே வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் இந்த சீசனில் விளையாடாத வீரர்கள் யார்? அவர்கள் எந்த அணியைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 2024 ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி விளையாடிய டி 20 போட்டியின் போது நியூசிலாந்து பேட்ஸ்மேன் டெவோன் கான்வே-வுக்கு காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக கட்டை விரலில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர் விளையாடுவது சந்தேகமே. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த வீரராக அறியப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே இவருக்கு பதிலான மாற்று வீரரை இன்னும் சி.எஸ்.கே அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களால் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஃபில் சால்ட்டை நியமித்துள்ளது. அதேபோல் அந்த அணியின் மற்றொரு வீரரான கஸ் அட்கின்சன் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ்:
தற்போது லண்டனில் கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள முகமது ஷமி இந்த முறை ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோல், டி20 உலகக் கோப்பை தொடரிலும் ஷமி விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கியமான வீரர்களில் முகமது ஷமியும் ஒருவர். அவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் இவருக்கு மாற்று வீரரை இன்னும் குஜராத் அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ரஞ்சி டிராபியின் போது பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது இவருக்கு பதில் மாற்று வீரரை இன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
மேலும் காண