பொங்கலுக்கான சிறப்பு ரயில்களில் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்ல ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8மணிக்கு துவங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் இருக்கைகள், பெரும்பாலான இரயில்களில் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து விட்டன.

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும், டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என்பதால் பெரும்பாலானோர் இணையதங்களின் வாயிலாக முன்பதிவு செய்தனர்.

முன்பதிவினை பொறுத்தவரை

செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று முன்பதிவு செய்தவர்கள், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். அதே போல் நாளை செப்டம்பர் 15ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 16ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 17ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 18ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிக்கெட் விரைவாக விற்றுவிடுவதால், கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றும், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.