ரஷ்யா புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்… அரிய புகைப்படங்கள்…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரயில் மூலமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார்.

ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று, சென்றுள்ளதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம், பியாங்யாங்கில் இருந்து, தனக்கென உள்ள பிரத்யேக ரயில் மூலமாக புறப்பட்டதாக, வடகொரிய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

அவருடன், வடகொரிய ராணுவத்தின் உயர் அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சிஇன் மூத்த தலைவர்கள் உடன் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், யார் யார் சென்றுள்ளனர் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

ரஷ்ய அதிபர் புதினுட‌னான சந்திப்பின் போது, உக்ரைன் போருக்கு தேவையான ஆயுத உதவிகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷ்யாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்தும் பேசுவார்கள் என தெரிகிறது.

ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தங்களை வட கொரியா மேற்கொண்டால், கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த‌து குறிப்பிடத்தக்கது.