Union Budget 2024 Nirmala Sitharaman To Become The Second Finance Minister To Present The Union Budget Six Times In A Row In India | Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024

Union Budget 2024: இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாரமன் பெறவுள்ளார்.
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருப்பது கொள்கை அறிவிப்புகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதி இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், 5 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை  முறியடித்துள்ளார்.
நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர்:
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். முன்னதாக,  இந்திய வரலாற்றில் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நபராக இருக்கிறார். அதாவது 1959 முதல் 1964 வரையிலான ஆட்சிக் காலத்தில்  5 முழு பட்ஜெட்டையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அதோடு, 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, நாட்டிலேயே அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார்.
பிரதமர் மோடி அரசின் பட்ஜெட்:
2014ல் மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு, நிதியமைச்சகராக பொறுப்பேற்ற அருண் ஜெட்லி, 2014-15 முதல் 2018-19 வரை தொடர்ச்சியாக ஐந்து பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். அவரது உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை வகித்து வந்த பியூஷ் கோயல், 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மோடி 2.0 அரசாங்கத்தில், சீதாராமனுக்கு நிதித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. 1970-71 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இந்திரா காந்திக்குப் பிறகு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.

Source link