"காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்படும்" பகீர் கிளப்பும் உ.பி. முதலமைச்சர்!

மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என பலரும் சர்ச்சைக்குரிய விதமாக பேசுவது தொடர் கதையாகி வருகிறது.

பாஜக தலைவர்களின் தொடர் சர்ச்சை:

இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் பற்றியும் பிரதமர் மோடி பேசிய கருத்துகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், "இஸ்லாமியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கிறது.தேசத்தின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை இருப்பதாக கடந்த 2006ஆம் ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பகிர்ந்து வழங்க அக்கட்சி வாக்குறுதி அளித்தது" என்று பேசினார்

இன்றைய பொதுக்கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாக சாடிய மோடி, "2004 இல், ஆந்திரப் பிரதேசத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை" என்றார்.

"ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்"

வெறுப்பை தூண்டும் விதமாக பிரதமர் மோடி பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாக புகார் எழுந்தது. மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "பாஜகவுக்கு வாக்களியுங்கள். மம்தா பானர்ஜியின் குண்டர்களை தலைகீழாக தொங்கவிடப்பட்டு தோலுரிப்பேன்" என்றார்.

மோடி, அமித் ஷா வரிசையில் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்படும்" எனக் கூறியுள்ளார். அம்ரோஹாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டு மீண்டும் ஒரு முறை பொய்யான தேர்தல் அறிக்கையுடன் உங்களிடம் வந்துள்ளனர்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள், அவர்கள் ஆட்சி அமைத்தால் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என்று சொல்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள், இந்த நாடு பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பால் நடத்தப்படுமா அல்லது ஷரியத் சட்டத்தால் நடத்தப்படுமா?

மக்களின் சொத்துக்களை பறித்து பங்கீடு செய்வோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸும், சமாஜ்வாதியும் உங்கள் சொத்தைக் கொள்ளையடிக்க அனுமதிக்க விரும்புகிறீர்களா?

இந்த வெட்கமற்றவர்களின் நிலையைப் பாருங்கள். ஒருபுறம், அவர்கள் உங்கள் சொத்துக்களை குறி வைக்கிறார்கள், மறுபுறம் மாஃபியாவையும் குற்றவாளிகளையும் தங்கள் கழுத்தணியாக்கி, அவர்கள் பெயரில் குர்ஆனை ஓதுகிறார்கள்" என்றார்.

இதையும் படிக்க: Fact Check: இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பேச்சு! மன்மோகன் சிங் சொன்னதாக பிரதமர் மோடி கூறியது உண்மையா?

Source link