ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கிறது.
எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்?
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தீவிரமாக வேலை செய்து வருகிறது.
இந்த நிலையில், தங்களின் தேர்தல் உத்தி, இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், “இந்து மதத்திற்கோ அல்லது இந்துக்களுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. பிரதமர் மோடியை இந்துக்களின் மீட்பர் என்று முன்னிறுத்துவதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் மீதும் இந்து எதிர்ப்பு சாயம் பூசுகிறது பாஜக. இது அவர்களின் உத்தி” என்றார்.
மனம் திறந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம்:
இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய சிதம்பரம், “மற்ற மாநிலங்கள் குறித்து என்னால் பேச முடியாது. தமிழகத்தில் இந்திய கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்யும் என்று என்னால் நம்பிக்கையுடன் கணிக்க முடியும்.
கேரளாவில், இரண்டு முன்னணிகளும் (காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி) 20 இடங்களை பகிர்ந்து கொள்ளும். ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது. கர்நாடகா மற்றும் தெலங்கானாவில், காங்கிரஸ் அரசாங்கங்கள் பிரபலமாக உள்ளன. காங்கிரஸுக்கு 2019ஐ விட இந்த முறை அதிக இடங்கள் கிடைக்கும். ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லியில் இருந்து இந்தியா கூட்டணி பற்றி ஊக்கமளிக்கும் செய்திகள் வருகின்றன” என்றார்.
மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா குறித்து பேசிய அவர், “சந்தேகத்திற்கு இடமின்றி, அவர் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார். மேற்கு வங்கத்தை தன்னுடைய கோட்டையாக வைத்திருக்கும் அவரது திறமை இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய சிதம்பரம், “கச்சத்தீவு என்பது முடிந்து போன பிரச்னை. இது தொடர்பான ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திடப்பட்டது. பிரதமர் மோடி 2014 முதல் பதவியில் இருக்கிறார்; கடந்த 10 ஆண்டுகளாக அவர் ஏன் இந்தப் பிரச்னையை எழுப்பவில்லை?” என்றார்.
மேலும் காண