Among India jobless 83 percent are youth says International Labour Organization | Unemployement: கதறும் வேலையில்லா இளைஞர்கள்! விண்ணை முட்டும் வேலைவாய்ப்பின்மை விகிதம்


Unemployement: 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையின்றி சிரமப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கையில் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம்:
இந்தியா தற்போது  எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்களில் முதன்மையாக இருப்பது வேலைவாய்ப்பின்மை பிரச்னை தான். இளங்கலை, முதுகலை படித்த பட்டாதாரிகள் கூட வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர். இதனால், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வேலைவாய்ப்பை அதிகாரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், அது முழுமையாக பலனளிக்கவில்லை. இதனால், மத்திய பாஜக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர்.  இப்படியாக இருக்கும் நிலையில், சர்வதச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
83 சதவீத இளைஞர்கள்:
அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  இந்தியாவின் வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்தா நாகேஸ்வரன் வெளியிட்டார். இதில், 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையின்றி சிரமப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கையில் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வியை  முடித்து விட்டு வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 54.2  சதவீதமாக இருந்த நிலையில், 2022ல் 65.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.  இதில், ஆண்களை விட பெண்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் வேலையில்லாமல் 62.2 சதவீத ஆண்களும், 76.7 சதவீத பெண்களும் இருப்பாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
”வேலைவாய்ப்பின்மைக்கு அரசால் தீர்வு காண முடியாது”
இதுகுறித்து பேசிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த் நாகேஸ்வரன், “அனைத்து சமூக, பொருளாதார பிரச்னைக்கும் அரசு தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.  இவரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.   
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டிருப்பதாவது, ”வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது பாஜக அரசால் இயலாது என்றால் ‘நாற்காலியைக் காலி செய்’ என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும் வேலையில்லாமைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்” என்றார். 
இதனை தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “மனித வளத்தை வளர்ப்பதற்கு அரசாங்கம் போதுமான முன்னுரிமை கொடுக்கவில்லை (குறிப்பாக வடக்கில், தொடக்கப்பள்ளிகளில் சேர்ப்பதில்). சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 
 
 

மேலும் காண

Source link