நாங்க ரெடி! 400+ கன்ஃபார்ம்! தேர்தல் தேதி வெளியானதும் பிரதமர் மோடி போட்ட ட்வீட்

இந்தியாவில் 7 கட்டங்களாக 18வது மக்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் இன்று அதாவது மார்ச் மாதம் 16ஆம் தேதி தெரிவித்தது. அதில் முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி 7ஆம் கட்டத்தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டது 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விட்டது.  கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நல்ல நிர்வாகத்தினாலும், நிறைவேற்றிய வாக்குறுதிகளினாலும் செய்யப்பட்ட எங்களின் சாதனைகளைச் சொல்லி மக்களிடத்தில் வாக்கு சேகரிப்போம். இந்த தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.  
மேலும், “ பத்து ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாக நாங்கள் பதவியேற்பதற்கு முன்னர், இந்திய மக்கள் காங்கிரஸ் கூட்டணியின் பரிதாபகரமான நிர்வாகத்தால் ஏமாற்றப்பட்டு நாடே மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மோசடிகள் மற்றும் கொள்கை முடக்கம் ஆகியவற்றினால் அனைத்து துறைகளும் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. உலகமே இந்தியாவை கைவிட்டது. அதன் பின்னர்தான் இந்தியாவுக்கு ஒரு புகழ்பெற்ற திருப்பம் ஏற்பட்டது. எனது அரசால் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் சென்றடைந்து நமது நாடு வளர்ச்சி அடைவது மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனைகளை படைத்து வருகின்றது. 
எங்கள் எதிர்க்கட்சி பலம் வாய்ந்ததாகத் தெரிந்தாலும் அவர்களால் எந்த பிரச்னையும் இல்லை.  எதிர்க்கட்சிகளால் செய்யக்கூடியது எங்களை துஷ்பிரயோகம் செய்து வாக்கு வங்கி அரசியலை செய்வது மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் குடும்ப அரசியலும், சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சிகளும் இனி எப்போதும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. இவர்களின் சாதனையாக இருப்பது அவர்கள் செய்த ஊழல் மட்டும்தான். ஊழல் நிறைந்த தலைமையை மக்கள் விரும்பவில்லை.
எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தில், செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. கடந்த பத்தாண்டுகள் எழுபது ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் உருவாக்கப்பட்ட பின்னடைவுகளை சரி செய்யவே சரியாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்தியா செழிப்பாகவும், தன்னிறைவாகவும் மாற முடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வை ஊட்டுவதாகவும் இருந்தது. இந்த உணர்வை நாங்கள்  தொடர்ந்து உருவாக்குவோம்” என தெரிவித்துள்ளார். 

Source link