Aaha Enna Varigal Series 2 This Song Lyrics Very Close to Our Hearts Express Mood of Many People Who Stuck in Certain Thoughts


பகல் பொழுதில் எத்தனையோ உற்சாகப்பாடல்களையும், கானா பாடல்களையும், குத்துப்பாடல்களையும் கேட்டாலும்,இரவுப் பொழுதில் நாம் உறங்கும் நேரத்தில் மனதை மயிலிறகால் வருடுவது போல பாடல்களை கேட்கவே மனம் விரும்பும். இளையராஜாவின் நூற்றுக்கணக்கான பாடல்கள் அதுபோன்று உள்ளது. இளையராஜாவின் அந்த இனிமையான இசைக்கு பலமாக அமைந்தது பாடல் வரிகள்.
பூங்காற்று திரும்புமா…
அதில், தலைமுறை கடந்து பலரும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று ‘பூங்காற்று திரும்புமா’. தன்னை மதிக்காத மனைவியுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கணவன், தனது மன துயரத்தினை பாடல் பாடி போக்கிக்கொள்ளும் விதமாகவும், அவனது துயரத்திற்கு இளம்பெண் ஆறுதல் கூறுவது போலவும் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கும்.
மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி ஆகியோரின் குரலில் இந்தப் பாடல் நம் மனதிற்கு மிக மிக நெருக்கமானதாக மாறியிருக்கும். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் நமக்கு ஆறுதல் கூறும் வண்ணம் அமைந்திருக்கும். குறிப்பாக, வைரமுத்து எழுதிய இந்த பாடலில்
“என்ன சொல்லுவேன்..
என்னுள்ளம் தாங்கல..
மெத்த வாங்குனேன்..
தூக்கத்தை வாங்கல”
வரிகள் இன்றும் பலருக்கு ஆறுதலாக உள்ளது. காதல் பிரச்சினை, கணவன் – மனைவி பிரச்சினை, குடும்பப் பிரச்சினை, வெளியில் சொல்ல முடியாத பிரச்சினை என இரவுகளில் தூக்கமின்றி தவிக்கும் பலருக்கும் இந்த வரிகள் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. இன்றைய சூழலில் படுத்தவுடன் நிம்மதியாக தூங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.  ஏதோ சிந்தனைகளில் சிக்கித் தவிக்கும் பலரின் மனநிலையை உணர்த்தும் விதமாக இந்த வரிகள் அமைந்துள்ளது.
சுக ராம் சோகம்தானே:
இந்த வேதனைகளுக்கு ஆறுதல் சொல்லும்விதமாக இதே பாடலில் வைரமுத்து மற்றொரு வரிகள் எழுதியிருப்பார்.
“இந்த வேதனை
யாருக்குத்தான் இல்ல”
“சுக ராகம்
சோகம்தானே..”
இந்த உலகத்தில் கவலைகள் இல்லாத மனிதர்கள் யார்? பிரச்சினைகளிலே சிக்கிவிட்டால் வாழ்க்கையை எப்படி வாழ்வது? என்றும், மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்கும் வகையில் பாடப்படும் சோக கீதம் கூட ஒரு வித சுகம்தான் என்றும் ஆறுதல் கூறுவது போல எழுதியிருப்பார்.
உள்ளுக்குள் குமுறும் உள்ளத்திற்கு ஆறுதலாக அமைந்திருக்கும் இந்த பூங்காற்று திரும்புமா பாடல், பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் இடம்பெற்றுள்ளது. முதல் மரியாதை இமாலய வெற்றி பெற்றதற்கு அந்தப் படத்தின் வலுவான திரைக்கதையை போல, அந்தப் படத்தின் பாடல்களும் மிக மிக முக்கிய காரணமாக அமைந்தது. வேறொரு பாடல் வரிகளுடன் அடுத்த தொடரில் சந்திக்கலாம்.
மேலும் படிக்க:  ஆஹா என்ன வரிகள் 1: நாயகியின் காதலில், தமிழை பெருமைப்படுத்திய யுகபாரதி!
 

மேலும் காண

Source link