Tamil Nadu Government Pay Hike Announcement For Part-time Teachers RS 2500 Hike

பகுதி நேர ஆசிரியர்களுக்கு இதுவரை 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.  
தமிழகத்தில் நிரந்தர ஆசிரியர்களின் சம்பளத்தை ஒப்பிடும்போது, தாங்கள்,மிகவும் குறைவான சம்பளத்தையே பெற்று வருவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் கூறி வந்தனர். 
 
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அவர்கள் தற்போது வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி வரும் நிலையில் தற்போது  அவர்களுக்கு ரூ. 2500 ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி, ரூ.10,000-லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நடப்பு மாதத்தில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை,தையல், தோட்டக்கலை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். அதையடுத்து 2014-ஆம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டது. 2017-ம் ஆண்டு ரூ. 700 உயர்த்தப்பட்டது.கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ரூ.2,300 ஊதியம் உயர்த்தப்பட்டதால் ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர். இதனையடுத்து,  ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்துடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முதல்வரிடம் ஆலோசித்து விட்டு அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவித்தார். 
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்கள் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் பகுதி நேர ஆரிசியர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவர்கள் ரூ.10,000 ஊதியம் பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.12,500 ஊதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
மேலும் படிக்க 

 

Source link