கருணாநிதி பற்றி தரக்குறைவாக பேசுவது தொடர்ந்தால், சீமானை பற்றி நடிகை விஜயலட்சுமி பேசிய அனைத்தையும் வெளியிடுவோம் என்று சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் சுப.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயக நாட்டில் யாரைப்பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்றும், ஆனால் அது அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார்.
ஆனால், எந்த ஒரு அரசியலும் இல்லாமல், கருணாநிதியைப் பற்றி சீமான் தரக்குறைவாக பேசியதும், பாட்டு பாடியதும் அநாகரிகம் என்று குற்றம் சாட்டினார். இதே போன்று தொடர்ந்து சீமான் பேசினால், சீமானைப் பற்றி நடிகை விஜயலெட்சுமி என்னென்ன பேசியுள்ளாரோ அதனை எல்லாம் பொதுவெளியில் மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் என்று எச்சரித்தார்.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் நினைவிடம் உள்ள இடத்தில், ஜெயலலிதாவின் நினைவிடமும் உள்ளதை, மூன்று ஆண்களுக்கு இடையில் ஒரு பெண் என்று அவர் பேசியது மிகப்பெரிய அநாகரிகம் என்ற சுப.வீரபாண்டியன், ஜெயலலிதாவைப் பற்றி இவ்வாறு பேசிவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை கேட்டதாக விமர்சித்தார்.
தரக்குறைவான அரசியலை சீமான் தமிழகத்தில் அரங்கேற்றிக் கொண்டிருப்பதாக கூறிய சுப.வீரபாண்டியன், சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார்.
ஏற்கனவே கருணாநிதி குறித்த தனது பாட்டுக்கு, அமைச்சர் கீதா ஜீவன் பேசியதற்கு பதிலளிக்க முடியாது என்று சீமான் கூறியிருந்ததோடு, கருணாநிதியின் உறவினர்கள் கேள்வி எழுப்பட்டும் என்று கூறியிருந்தார். இப்போது, சுப.வீரபாண்டியன் சீமானை எச்சரித்து பேசியிருப்பதற்கும், சீமான் கண்டுகொள்ளாமல் இருப்பார் என்றே கூறப்படுகிறது.