சட்டம் ஒழுங்கு பிரச்சினை… தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

தமிழகத்தில் அடுத்த‍டுத்து படுகொலைகள், கூலிப்படைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதோடு, அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை, நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகி கொலை, கடலூரில் பாமக நிர்வாகியை வெட்டி கொல்ல முயற்சி என அடுத்த‍டுத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் கூறி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மை செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், ஆவடி காவல் ஆணையர் சங்கர், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமச்சரல் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சரின் இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, ரவுடிகள் மற்றும் கூலிப்படைகள் குறித்து காவல்துறை தனி கவனம் செலுத்தி, தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் கூறுவது போன்று இல்லை என்று  நிரூபிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.