To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February

Kachchatheevu: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் மொத்தமாக 8 ஆயிரம் பேர் பங்கேற்க, இலங்கையின் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.’
கச்சத்தீவு திருவிழா:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.  இதில் முதல் நாளில் இந்தியா சார்பிலான கொண்டாட்டங்களும், இரண்டாவது நாளில் இலங்கை பக்தர்கள் சார்பிலான கொண்டாட்டங்களும் நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.
8,000 பக்தர்களுக்கு அனுமதி:
திருவிழாவின் முதல் நாளான பிப்.23ம் தேதியன்று மாலை இந்திய பக்தர்கள், பாதிரியார்கள் தரப்பில் கொடியேற்றம், இரவில் தேர்பவனி நடைபெறும். தொடர்ந்து,  பிப்ரவரி 24ம் தேதியன்று அந்தோணியார் ஆலய வளாகத்தில் இலங்கை பக்தர்கள், பாதிரியார்கள் பங்கேற்கும் சிறப்பு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். இதில் இந்தியா சார்பில் நான்காயிரம் பேர் மற்ரும் இலங்கை சார்பில் 4000 பேர் என, மொத்தமாக 8000 பேர் பங்கேற்க யாழ்ப்பாணம் மாவட்ட அரசு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இந்தியர்கள் பயணிப்பதற்கு ஏதுவாக, பிப்ரவரி 23ம் தேதி அதிகாலை 6 மணி முதல் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்ற பக்தர்கள் படகில் கச்சத்தீவு செல்லலாம். மறுநாள் காலை 10 மணிக்குள் திருவிழா திருப்பலி பூஜை நிறைவு பெற்று, கச்சத்தீவில் இருந்து படகில் புறப்பட்டு மீண்டும் ராமேஸ்வரம் வர இலங்கை கடற்படை அனுமதி அளித்துள்ளது.
பிப்ரவரி 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்:
இந்நிலையில், கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க விரும்புபவர்கள், பிப்ரவரி 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளரும்,  ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய பாதிரியாருமான சந்தியாகு பேசுகையில், ‘கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான விண்ணப்ப படிவ விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 6ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த பக்தர்கள் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் படகில் கொண்டு செல்லக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.  விண்ணப்ப படிவத்திற்கு ரூ.10, படகில் செல்ல கட்டணமாக ரூ.2 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆலய வரலாறு:
1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது. கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்துக் காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் இங்கு வழிபாடு நடத்துவர். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு திருவிழா, அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவு 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக் நீரிணை’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம். 

Source link