Yogi Adityanath: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் மக்களவை தேர்தல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடத்தப்பட்டது.
பாஜக தலைவர்கள் தொடர் சர்ச்சை:
இதையடுத்து, நேற்று 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தேர்தல் தொடங்கியதில் இருந்தே பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என பலரும் சர்ச்சைக்குரிய விதமாக பேசுவது தொடர் கதையாகி வருகிறது.
குறிப்பாக, இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்துகள் வெறுப்பை தூண்டும் விதமாக இருப்பதாக பூகார் எழுந்தன. இஸ்லாமியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருப்பதாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்படும்” எனக் கூறினார். இந்த நிலையில், மாட்டிறைச்சி தொடர்பாக பேசி யோகி ஆதித்யநாத் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மாட்டிறைச்சி குறித்து பேசிய யோகி ஆதித்யநாத்:
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாட்டிறைச்சி உண்ண அனுமதி வழங்கிவிடும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மொராதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “தங்கள் விருப்பப்படி உணவு உண்ணும் உரிமையை காங்கிரஸ் சிறுபான்மையினருக்கு வழங்க விரும்புகிறது. அதாவது பசுவதை அனுமதிப்பது தொடர்பாக அவர்கள் பேசி வருகிறார்கள்.
மாட்டு இறைச்சி உண்ணும் உரிமையை இந்த வெட்கமற்றவர்கள் [காங்கிரஸ்] வழங்குவார்கள். அதே நேரத்தில் நமது சாஸ்திரங்கள் பசுக்களை தாய் என்று குறிப்பிடுகின்றன. கசாப்புக் கடைக்காரர்களின் கைகளில் மாடுகளைக் கொடுக்க விரும்புகிறார்கள். இதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா?” என்றார்.
தொடர்ந்து பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர், “பெண்களின் தங்க ஆபரணங்களை பறித்து ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தில் இருந்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு காங்கிரஸ் விநியோகிக்கும். அதாவது ஒருவரின் வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அதில் இரண்டு அறைகள் அவர்களால் எடுத்துச் செல்லப்படும். இது மட்டுமின்றி, பெண்களின் நகைகளை கைப்பற்றுவோம் என்கிறார்கள். நம் நாடு, இதை ஒருபோதும் ஏற்காது.
கர்நாடகாவில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டில் இருந்து முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்” என்றார்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்து பேசிய யோகி ஆதித்யநாத், “அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் ராமர் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனால், தெய்வம் என்பது அனைவருக்கும் உரியது. இவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” என்றார்.
மேலும் காண