நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (Tamilaga Vettri Kazhagam) உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவி கொடுப்பதில்லை என மகளிரணி தலைவி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான மகளிர் தலைமையிலான குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகம் செய்தார். இதன்மூலம் 3 நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் கட்சி ஆரம்பித்த ஒரே மாதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவில் விஜய் மக்கள் இயக்க மகளிரணி தலைவி பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் நிறைய தகவல்களை எங்கள் தலைவருக்கு தெரிவிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இதனை எங்கள் தலைவர் தளபதி விஜய்யிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். யாரையும் குற்றச்சாட்டவோ, மனதை புண்படுத்தவோ இதை நான் சொல்லவில்லை.
தளபதிக்கு வணக்கம். நீங்கள் எங்களை பார்த்திருப்பீர்களா என்று கூட தெரியவில்லை. 2010ல் நீங்கள் விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே இதுவரைக்கும் உண்மையாக உறுதுணையாக உழைப்பை கொடுத்துள்ளேன். என்னோட கை காசை போட்டு நிறைய நலத்திட்டங்கள் செய்து வருகிறேன். இது எல்லாமே பொதுநல சேவையாக செய்தனே தவிர, அதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. இப்போது நீங்கள் கட்சி அறிவித்து விட்டீர்கள். கடந்த 30 ஆண்டுகள் உங்களுக்காக உயிரை கொடுத்து உழைக்கும் மற்ற மாவட்ட சகோதர சகோதரிகளுக்காகவே இதை பேச நினைக்கிறேன்.
உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவியோ, உங்களின் உண்மையான உதவியோ போய் சேர்வதில்லை. நடுவில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் அனைவரும் உண்மையாக இருப்பவர்களை உங்கள் பக்கமே கொண்டு வரமாட்டேங்கிறார்கள். அவர்களுக்கு சாதகமாக, சொந்தக்காரராக, முக்கியமானவராக இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் எல்லா கட்சியிலும் நடப்பது போல தமிழக வெற்றி கழகத்திலும் தவறு நடந்து கொண்டிருக்கிறது.
இதை ஆரம்பத்திலேயே நீங்கள் சரி செய்து உண்மையாக இருப்பவர்களுக்கு உறுதுணையாக கைகொடுக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் தமிழக வெற்றி கழகத்திற்கு உயிரைக் கொடுத்து பாடுபடும் அளவுக்கு உறுப்பினர்கள் சேருவார்கள்.
நாங்கள் கிட்டத்தட்ட 15 வருடமாக எந்தவித பாகுபாடும் இல்லாமல் என்னுடைய சொந்த பணத்தை போட்டு ரத்ததானம், அன்னதானம், பள்ளிக்கு கட்டிடம் கட்டுதல், உங்கள் பெயரில் எல்லாம் நலத்திட்டமும் செய்திருக்கிறோம். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவில் உள்ள நகர நிர்வாகிகள் எங்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். உங்களுக்கு சேவை செய்வதை பாதி கூட செய்ய விடாமல் தடுத்து பிரச்சினை செய்து வருகிறார்கள். இதனை நாங்கள் மேல் இடத்திற்கு கொண்டு வந்தோம். இதை நீங்கள் சரி செய்து உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு உதவியாக இருக்கும். எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க.
முதன் முதலில் மகளிர் அணி சார்பில் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது இந்த குமாரபாளையம் தாலுகாவில் தான் என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இன்னொரு முறை நீங்கள் பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது அதனை பரிசீலனை செய்து யார் யார் உண்மையாக வேலை செய்தார்களோ அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும்” என பிரேமலதா கூறியுள்ளார்.
மேலும் காண