மாஸ் காட்டிய இம்ரான் கான்.. ஆனா, ராணுவம் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்:

அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்த இடங்கள் ஒதுக்கப்படும். எனவே, 266 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பஜாவூரில் ஒரு வேட்பாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து, ஒரு இடத்தில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 102 இடங்களில் வெற்றிபெற்றனர். அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது.

மற்றவர்கள், 28 இடங்களில் வெற்றிபெற்றனர். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க உதவும்படி நவாஸ் ஷெரீப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்பேக் கொடுத்து அசரவைத்த இம்ரான் கான்:

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், "ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தான் அரசியலமைப்பின் மீது பாகிஸ்தான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தற்போது அதே நம்பிக்கையை அரசியல் முதிர்ச்சியுடன் ஒற்றுமையுடன் பாகிஸ்தான் அரசியலமைப்பின் மீது அரசியல் கட்சிகள் வைக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில், நவாஸ் ஷெரீப்புக்கு ராணுவத்தின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ஊழல் வழக்கில் சிக்கி லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து, அவர் சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பினார்.

ராணுவத்தின் ஆதரவோடுதான், அவர் பாகிஸ்தான் திரும்பியிருப்பதாகவும் அவரை வெற்றிபெற வைக்க தேர்தலில் ராணுவம் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும், மக்கள் மத்தியில் இம்ரான் கானுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக அவர் பெரிய வெற்றியை பதிவு செய்தார்.

இப்படிப்பட்ட சூழலில், இம்ரான் கான் ஆதரவாளர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க நவாஸ் ஷெரீப்பை பிரதமராக ஆக்க ராணுவம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மக்களின் முடிவுகளை மாற்ற நினைத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இம்ரான் கான் கட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Source link