பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை போன்று இந்த முறையும் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சர்ச்சை:
உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாள்களே உள்ள நிலையில், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் செல்லும்போது மீன் சாப்பிட்ட வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சைத்ரா நவராத்திரியின்போது அசைவம் சாப்பிடுவதா என பாஜகவினர், இதை சர்ச்சை ஆக்கியுள்ளனர்.
இந்துக்கள் புனிதமாக கருதும் சைத்ரா நவராத்திரி நேற்று தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு இந்துக்கள் வழிபாடு மேற்கொள்வர். இதை சுட்டிக்காட்டிய இணையவாசிகள் சிலர், இந்துக்களை கோபப்படுத்தும் விதமாக தேஜஸ்வி யாதவ் இப்படி செய்ததாக கடுமையாக சாடியுள்ளனர்.
மீன் சாப்பிட்ட பீகார் முன்னாள் துணை முதலமைச்சர்:
இதற்கு பதிலடி அளித்த தேஜஸ்வி யாதவ், நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் அளித்த விளக்கத்தில், “பாஜக மற்றும் கோடி மீடியா (மோடியை ஆதரிக்கும் ஊடகம்) ஆதரவாளர்களின் அறிவை பரிசோதிக்க இந்த வீடியோவை நாங்கள் பதிவேற்றினோம்.
நாங்கள் நினைத்தது போலவே நடந்துள்ளது. வீடியோ எப்போது எடுக்கப்பட்டது போன்ற விவரங்களும் பதிவில் உள்ளன. ஆனால், கண்மூடித்தனமாக பின்தொடர்பவர்களுக்கு என்ன தெரியும்?” என குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு, தேஜஸ்வி யாதவும் முன்னாள் அமைச்சர் முகேஷ் சாஹ்னியும் ஹெலிகாப்டரில் ஒன்றாக செல்லும்போது உணவு உண்ணும் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
चुनावी भागदौड़ एवं व्यस्तता के बीच हेलिकॉप्टर में भोजन! दिनांक- 08/04/2024 #TejashwiYadav #bihari #politics #Bihar #biharifood #बिहार #india pic.twitter.com/JIfgbXfQpP
— Tejashwi Yadav (@yadavtejashwi) April 9, 2024
பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் மதிய உணவு சாப்பிட 10-15 நிமிடங்கள் மட்டுமே கிடைத்ததை வீடியோவில் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டிருந்தார். மீன், ரொட்டி உள்ளிட்ட உணவு வகைகளை அவர் சாப்பிடுவது வீடியோவில் பதிவானது.
இந்த விவகாரத்தில் தேஜஸ்வி யாதவை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “தேஜஸ்வி யாதவ் ஒரு பருவகால சனாதானி. சமரச அரசியலில் ஈடுபடுபவர். அவரது தந்தை (லாலு யாதவ்) ஆட்சியில் இருந்தபோது, ரோஹிங்கியாக்கள், வங்கதேச ஊடுருவல்காரர்கள் என பலர் இங்கு வந்தனர். சனாதனத்தின் முகமூடியை அணிந்துகொண்டு சமரச அரசியல் செய்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் காண