Lok Sabha Elections 2024 Don’t Campaign In Places Of Worship Villupuram District Collector – TNN | Lok Sabha Elections 2024: வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது

தேர்தல் பிரச்சாரத்தின்போது எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ அல்லது மொழி பேசுபவர்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையிலோ இருக்க கூடாது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்  தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் -2024 விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ அல்லது மொழி பேசுபவர்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையிலோ, வேறுபாட்டை, பகைமையை வளர்க்கும் வகையான நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது. மற்ற அரசியல் கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யும்போது கட்சியின் கொள்கை குறித்தோ அல்லது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் இருத்தல் வேண்டுமே அன்றி தலைவர்களின் பொது வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருத்தல் கூடாது.
மேலும்,வழிப்பாட்டுதலங்களான கோயில், மசூதி மற்றும் கிறித்துவ தேவாலயங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. வாக்குகள் சேகரிப்பதற்கு மதம் ஒரு தடையல்ல. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களிடத்திலும் வாக்கு சேகரிக்கலாம். தேர்தல் பணிக்காக வேட்பாளர் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடமிரு;நது முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட அனுமதியின் அசல் நகலை வாகனத்தின் முன் கண்ணாடியில் பார்வையில் படும்படி ஒட்ட வேண்டும்.
அனுமதியில் வாகனத்தின் எண் மற்றும் எந்த வேட்பாளருக்கு வழங்கப்பட்டதோ அந்த வேட்பாளரின் பெயர் குறிக்க வேண்டும். ஒரு வேட்பாளருக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதியை வேறு வேட்பாளர் பன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல் வாகனங்களைப் பயன்படுத்துவது விதிமுறைகளுக்குப் புறம்பாக வேட்பாளர் தேர்தல் பணி மேற்கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிலையங்களையோ அல்லது கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு மைதானத்தையோ (அரசு, அரசு உதவி பெறும் அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள்) அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது. தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனத்தில் வெளிப்புற மாற்றங்களோ அல்லது ஒலி பெருக்கிப் பொருத்துவதாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட அலுவலரிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
வேட்பாளர்கள் பொதுக் கட்டடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவதோ விளம்பரங்கள் எழுதுவதோ கூடாது. சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் அல்லது பாலிதீன் கொண்டு விளம்பர சுவரொட்டி மற்றும் பேனர்கள் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும். அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்படாமல் தேர்தல் சம்மந்தப்பட்ட துண்டு பிரசுரம், நோட்டீஸ் எதையும் அரசியல் கட்சிகள் அச்சடிக்கக் கூடாது. வேட்பாளர் சார்பாக வாக்காளருக்கு புடவை, சட்டை போன்ற உடைகளை வழங்கக்கூடாது. தேர்தல் பிரச்சாரம் முடிந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு இடைப்பட்ட 48 மணி நேரத்தில் வேட்பாளர் தேர்தல் சம்மந்தப்பட்ட விவரங்களை வாக்காளர்களுக்கு திரைப்படம், வீடியோ மூலம் திரையிட்டு ஒளிபரப்பக் கூடாது.
வேட்பாளர் தனது படம் அச்சடிக்கப்பட்ட டைரி, காலண்டர் மற்றும் ஸ்டிக்கர்களை வாக்காளர்களுக்கு வழங்கக் கூடாது. தேர்தல் சமயத்தில் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களை அமைக்கலாம். ஆனால் இவ்வலுவலகங்கள், தனியார் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது. மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அதனை ஒட்டி அமைக்கக் கூடாது. பள்ளிகள், மருத்துவமனைகளை சுற்றி அமைக்கக் கூடாது. வாக்கு சாவடி எல்லையிலிருந்து 200 மீட்டர் சுற்றளவிற்குள் அமைத்தல் கூடாது.  தேர்தல் சம்மந்தமாக பொது கூட்டங்கள் நடத்துவதோ அல்லது ஊர்வலங்கள் போகவோ, காவல் துறையிடமிருந்து முன் அனுமதி பெறவேண்டும். ஒலி பெருக்கி அமைப்பதற்கும் காவல் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
மேலும், சி.விஜில் செயலி (C-vigil App) மூலம், வேட்பாளர்களின் நடத்தை விதிமீறல்கள் குறித்த எந்தவொரு வாக்காளரும் பதிவு செய்யப்பட்ட வீடியோ அல்லது செய்தியினை தங்களது மொபைல்போன் மூலம் புகார் அளித்திடலாம். இவ்வாறு பதியப்பட்ட புகார்களை ஆய்வு செய்து உடனடியாக தீர்வு காணப்படும்.  எனவே நாடாளுமன்ற பொதுத் தேர்தல் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் பொறுப்புள்ள ஜனநாயகம் அமைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

Source link