"ஒரு புல்லட்க்கு 10 புல்லட்களை பதிலடியா தாங்கனு சொன்னேன்" தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி சர்ச்சை!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக நாளை 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தொடர் சர்ச்சையை கிளப்பும் பிரதமர் மோடி:

இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் விதிகளை மீறுவதாக பிரதமர் மோடி மீது தொடர் புகார் எழுந்து வருகிறது. வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவதாகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக, இஸ்லாமியர்கள் குறித்து தொடர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், பாதுகாப்பு படைகள் குறித்து பேசி பிரதமர் பரபரப்பை கிளப்பியுள்ளார். மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், எல்லை பாதுகாப்பு குறித்து பேசிய அவர், "ஒரு தோட்டாவுக்கு பதிலடியாக பத்து தோட்டாக்களை சுடுமாறு நம் ராணுவ வீரர்களிடம் கூறியுள்ளோம்" என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த 2019ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை மீறி பிரதமர் பேசியிருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

தேர்தல் விதிகளை மீறினாரா?

தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பேசிய பிரதமர், "இது சட்டத்திற்கு புறம்பானது. அரசியலமைப்பிற்கு எதிரானது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள ஓபிசி சமூகத்தினருக்கு எச்சரிக்கை மணியாக உள்ளது. அரசியல் சாசனத்தின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கர், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்.

ஆனால், காங்கிரஸ் அதை பின்வாசல் வழியாக அளித்து முதுகில் குத்தியது. ஆனால், பாஜக அரசு 80 கோடி மக்களுக்கு மத பாகுபாடு இன்றி இலவச ரேஷன் வழங்கியது. ஒரு முஸ்லீம் என்பதற்காக ஒருவருக்கு இலவச ரேஷன் கிடைப்பதில்லை என்று நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் பல ஆண்டுகளாக சதி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி, வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது. பல ஆண்டுகளாக, பாதுகாப்பு படைகளுக்கான ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை காங்கிரஸ் அனுமதிக்கவில்லை.

ஆனால், நாங்கள் அதை செயல்படுத்தினோம். முஸ்லிம் வாக்கு வங்கிக்காக எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் விரும்புகிறது. பாஜகவுக்கு நாட்டை விட பெரிது எதுவும் இல்லை. காங்கிரசுக்கு குடும்பமே முக்கியம்" என்றார்.

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 6 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. நாளை 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கவிருகிறது.

Source link