Reason behind the name of political party Tamilaga vetri kalagam Vijay follows the footprint of N Rangaswamy ys jagan mohan reddy


தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் (Vijay), அரசியலுக்கு வர போவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஜய். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று பதிவு செய்துள்ளனர். 
அரசியலில் நுழைந்த விஜய்:
அதில், தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், அதே நேரத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து தமிழ்நாடு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளார்.
தனது அரசியல் கட்சியின் பெயர் வெளியானதில் இருந்தே, ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் விஜய். குறிப்பாக, அவர் இந்த குறிப்பிட்ட பெயரை தேர்வு செய்தது ஏன் என்பது அனைவரின் மனதிலும் கேள்வியாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டு அரசியல் பாணியை பின்பற்றும் விதமாக தனது கட்சியின் பெயரில் ‘கழகம்’ என்ற வார்த்தையை சேர்த்து கொண்டுள்ளார்.
பொதுவாக, தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்கினால், அதன் பெயரில் திராவிடம் என சேர்த்து கொள்வது வழக்கம். ஆனால், திராவிடம் வார்த்தையை தவிர்த்துள்ளார். விஜயின் அரசியல் கட்சி பெயர் காரணம் குறித்து பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், ஒரு ருசிகரமான தகவல் கிடைத்துள்ளது.
கட்சி பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம்:
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் வழியை விஜய் பின்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய என். ரங்கசாமி, தனி கட்சி தொடங்கும்போது, என்.ஆர். காங்கிரஸ் என அதற்கு பெயர் சூட்டினார். 
‘நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்’ என்ற பெயரை சுருக்கித்தான் என்.ஆர். காங்கிரஸ் என பெயர் வைத்தார். ஆனால், தனது பெயரான என். ரங்கசாமி என்பதையே மறைமுகமாக கட்சிக்கு வைத்திருக்கிறார் என கூறப்பட்டது. 
அதேபோல, தனது தந்தையும் மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய் . எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜெகன் மோகன் ரெட்டி, தனி கட்சி தொடங்கினார். அதற்கு, யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் என பெயர் சூட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், தனது தந்தை பெயரான ஒய் . எஸ். ஆர் என்பதையே மறைமுகமாக கட்சிக்கு வைத்திருக்கிறார் என கூறப்பட்டது. 
அந்த வழியில், விஜயும், தளபதி விஜய் கழகம் (TVK) என்பதையே தமிழக வெற்றிக் கழகம் (TVK) என மறைமுகமாக வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது
 

மேலும் காண

Source link