நாமக்கல்லில் டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதால் சர்ச்சை


<p style="text-align: justify;">நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.</p>
<p style="text-align: justify;">நாமக்கல் மாவட்டம் முழுவதும் 188 அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும் பல லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன ஓட்டிகளும், மது பிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில் ஆங்கிலம், தமிழ் மொழிகளோடு ஹிந்தி மொழியிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">அப்பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்து வருவதால், அவர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இந்தியில் மதுபானக்கடையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் தங்களது கடைகளில் பெயர் பலகையை தமிழில் மட்டுமே இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு முத்திரையுடன் வைக்கப்பட்டுள்ள இந்தப் பெயர் பலகையில் 3 மொழிகள் இடம் பெற்றிருந்தது. மும்மொழிக் கொள்கை வலியுறுத்தப்பட்ட போதெல்லாம், தமிழ்நாடு இருமொழி கொள்கையை மட்டுமே ஏற்போம் என அறிவித்து அதையே நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மூன்று மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த பலகை மாற்றப்பட்டது.</p>

Source link