Lok Sabha Election 2024 South Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | South Chennai Lok Sabha Constituency: தென் சென்னை மக்களவைத் தொகுதி

South Chennai Lok Sabha Constituency: தென்சென்னை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். அந்த வகையில் மாநிலத்தின் மூன்றாவது தொகுதியான, தென்சென்னை மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாற்றை சற்றே விரிவாக அலசி ஆராயலாம்.
தென்சென்னை மக்களவைத் தொகுதி உருவான வரலாறு: 
தென்சென்னை மக்களவைத் தொகுதி ( South Chennai Lok Sabha constituency ) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் மூன்றாவது தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிற்கு முன் தென் சென்னை மக்களவைத் தொகுதியில்  தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர் மற்றும் தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
மறுசீரமைப்பை தொடர்ந்து தற்போது தென்சென்னை மக்களவைத் தொகுதியில் விருகம்பாக்கம், சைதாபேட்டை,  தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 
தென்சென்னை மக்களவைத் தொகுதி எப்படி?
தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் தென்சென்னையும் ஒன்று. இந்தத் தொகுதியில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். பழமை வாய்ந்த பல மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாப் பகுதிகள், பிரபலமான கல்வி நிறுவனங்கள், மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள்,  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த தொகுதியில் உள்ளன. அதிகளவில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட இந்த தொகுதியில், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.
ஆடை, ஆபரணங்களுக்கு பெயர் போன தியாகராயநகர், கோயம்பேடு மார்கெட் போன்ற தமிழகத்தின் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும், பல ஆயிரம் கோடிகள் புரளும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் தென்சென்னை தொகுதியில் உள்ளன. வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் தென் சென்னை உள்ளடக்கியுள்ளது.
தொகுதியின் பிரச்னை என்ன?
திருவான்மியூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல், பெருங்குடி குப்பை மேடு அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை அங்கு சரியாக கையாளப்படவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு. தென் சென்னைத் தொகுதியில், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்னும் குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதில் சிக்கல் உள்ளது. சில இடங்களில் மழைநீர் வடிகால்கள், கழிவுநீர்ப் பாதைகளுக்கான பணிகள் மந்தகதியிலேயே நடந்துவருகின்றன. தியாகராய நகர் பேருந்து நிலைய விரிவாக்கம், நடைபாதை கடைகள் அகற்றம் இத்தொகுதிகளின் தீர்க்கப்படாத நீண்டகாலப் பிரச்னைகளாக உள்ளன.
தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி வாகை சூடியுள்ளது. மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை நாடாளுமன்றத்திற்கு தேர்வானது இந்த தொகுதியில் இருந்து தான். இத்தொகுதி உருவாகி, 34 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் 1991 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக வெற்றியை ருசித்தது.



ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி


1957
கிருஷ்ணமாச்சாரி
காங்கிரஸ்


1962
நாஞ்சில் கி. மனோகரன்
திமுக


1967
பேரறிஞர் அண்ணா
திமுக


1967 (இ.தே)
முரசொலி மாறன்
திமுக


1971
முரசொலி மாறன்
திமுக


1977
வெங்கட்ராமன்
காங்கிரஸ்


1980
வெங்கட்ராமன்
காங்கிரஸ்


1984
வைஜெயந்தி மாலா
காங்கிரஸ்


1989
வைஜெயந்தி மாலா
காங்கிரஸ்


1991
ஸ்ரீதரன்
அதிமுக


1996
டி.ஆர். பாலு
திமுக


1998
டி.ஆர். பாலு
திமுக


1999
டி.ஆர். பாலு
திமுக


2004
டி.ஆர். பாலு
திமுக


2009
ராஜேந்திரன்
அதிமுக


2014
ஜெயவர்த்தன்
அதிமுக


2019
தமிழச்சி தங்கபாண்டியன்
திமுக


 
 
 

வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் – 9,93,590
பெண் வாக்காளர்கள் – 10,13,772
மூன்றாம் பாலினத்தவர் – 454
மொத்த வாக்காளர்கள் – 20,07,816
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
விருகம்பாக்கம் – ஏ.எம்.வி. பிரபாகர் (திமுக)
சைதாப்பேட்டை – மா. சுப்பிரமணியம் (திமுக)
தியாகராய நகர் – ஜெ. கருணாநிதி (திமுக)
மைலாப்பூர் – த. வேலு (திமுக)
வேளச்சேரி – அசன் மவுலானா (காங்கிரஸ்)
சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ் (திமுக)
தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் சாதித்தது, சறுக்கியது என்ன? 
சித்தாலப்பாக்கம் கிராமத்தை தத்தெடுத்து மாதிரி கிராமமாக்கியுள்ளார்.  விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் எட்டுக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.  கொட்டிவாக்கத்தில் மீன் அங்காடி கட்டுவது போன்றவை மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. தொகுதி முழுவதும் பேருந்து நிறுத்தங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகியவற்றோடு,  பள்ளிக்கரணை சதுப்புநில மீட்பு நடவடிக்கையும் பொதுமக்களிடையே நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்கள் சலுகை குறித்து யுஜிசியை வலியுறுத்தி தீர்வு காண்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு கோரிக்கைகள் வரிசை கட்டினாலும், வாக்குறுதிகளில் 50 சதவீதத்தை நிறைவேற்றியிருப்பது பாசிட்டிவ் ஆகவே பார்க்கப்படுகிறது.
அதேநேரம், தகவல் தொழில்நுட்ப மையத்தின் கிளஸ்டர் அமைக்கப்படாததால், குறைந்தளவிலான ஐடி நிறுவனங்களே தென்சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அறிவித்தபடி பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படவில்லை என்பதுடன், தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொய்வடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பணி முழுமை அடையாதது, சோழிங்கநல்லூரில் மத்திய அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்காததும் நெகட்டிவாக பார்க்கப்படுகிறது.

Source link