IPL 2024 chennai super kings vs sun risers Hyderabad 18th match head to head match preview playing 11 | IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை, ஹைதராபாத் அணிகள்?


ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 18வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றது.
ஐபிஎல் தொடர்
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. டி20 போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என எண்ணும் அளவுக்கு ரன்கள் குவிக்கப்பட்டு சாதனை மேல் சாதனை படைக்கப்பட்டு வருகிறது. 
சென்னை vs ஹைதராபாத் 
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் 18வது ஆட்டத்தில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கடைசியாக விளையாடிய போட்டியில் சென்னை அணி டெல்லியிடமும், ஹைதராபாத் அணி குஜராத் அணியிடமும் தோற்றுள்ளது. இரு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். 
புள்ளிப்பட்டியல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
இரண்டு அணிகளும் சரிசமமான பலத்தை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கொண்டுள்ளது. குறிப்பாக  ஹைதராபாத் அணி ஐபிஎல் சீசனில் அதிகப்பட்சமாக 277 ரன்களை இந்த சீசனில் குவித்துள்ளது. அந்த அணியின்  ஹெய்ன்ரிச் கிளாசன் பிற அணிகளுக்கு எமனாக திகழ்கிறார். அவரை வீழ்த்தினால் ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் கணித்துள்ளனர். 
இதுவரை நடந்தது என்ன? 
சென்னை, ஹைதராபாத் அணிகள் இதுவரை 19 முறை ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 14 முறையும், ஹைதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியில் சென்னை அணியே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 
விளையாடும் வீரர்கள் யார்? யார்? (கணிப்பு)
சென்னை அணி: ருத்துராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் டுபே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதீரானா
ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால். டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஏய்டன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் கிளாசன், சபாஸ் அஹமது, அப்துல் சமத், சன்வீர் சிங், பேட் கம்மின்ஸ், புவனேஸ்வர் குமார், மயங்க் மார்கண்டே 
மைதான நிலவரம் 
ராஜீவ் காந்தி மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானமாக இருக்கும். நடப்பு சீசனில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 277 ரன்களையும், இரண்டாவதாக பேட் செய்த மும்பை அணி 246 ரன்களையும் குவித்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த களத்தில் இன்றைக்கு ஒரு விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. சொந்த மைதானத்தில் விளையாடுவது ஹைதராபாத் அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண

Source link