India Republic Day Celebration Chief Guest France President Emmanuel Macron Visit Today

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர்:
ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் பங்கேற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, நாளை நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்படும் அவர் நேரடியாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூருக்கு செல்கிறார். ஜெய்ப்பூரில் பிரதமர் மோடி இருப்பதால் அவர் அங்கு செல்கிறார்.
ஜெய்ப்பூரில் சாலை பேரணி:
பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரதமர் மோடி – அதிபர் மேக்ரான் சந்திப்பு நடக்கிறது. இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மேலும், பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் என்று கருதப்படுகிறது. இன்று ஜெய்ப்பூரில் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இணைந்து பங்கேற்கும் சாலை பேரணியும் நடைபெற உள்ளது. இதன்காரணமாக, ஒட்டுமொத்த ஜெய்ப்பூர் நகரமும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் சிறந்த சுற்றுலா தளம் என்பதால் அங்கு வருகை தரும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அங்குள்ள புகழ் பெற்ற ஆம்பர்கோட்டை, ஜந்தர்மந்தர், ஹாவா மகால் உள்ளிட்ட பல சுற்றுலா தளங்களையும் சுற்றிப்பார்க்க உள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் மேக்ரான் ஜெய்ப்பூரில் இன்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு இரவு 8.50 மணிக்கு தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
குடியரசு தின கொண்டாட்டம்:
அங்கு இன்று இரவு ஓய்வு எடுக்கும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாளை காலை டெல்லியில் நடக்கும் பிரம்மாண்ட குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு, முப்படை வீரர்களின் சாகசங்களும் நடைபெற உள்ளது. இன்று முதலே ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தடைகளை தகர்க்கும் டிரம்ப்.. சிம்ம சொப்பனமாக திகழும் பெண்மணி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்
மேலும் படிக்க: கைது செய்யப்படுகிறாரா ராகுல் காந்தி? அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி

Source link