மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் விசிக கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் விசிக சார்பில் வழக்குறைஞர்கள் கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்தார்.
மத்திய அரசு குற்றவியல் சட்டங்களை, இன்னொரு பொடா சட்டம் என்ற வகையில் மாற்றி அமைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த திருமாவளவன், அதனை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
எப்படி வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதோ, அதே போன்று, புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும் என்ற அவர், திரைமறைவில் திட்டமிட்டவர்கள், ஏவியர்கள் என அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று நம்புவதாக கூறினார்.