குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்? கனடாவில் தொழிலதிபர் சுட்டுக்கொலை.. நடந்தது என்ன?


Canada Murder: இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் கனடாவும் அமெரிக்காவும் முதன்மையாக இருக்கிறது.
குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்? 
ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு செல்பவர்கள், அந்நாட்டு கிரீன் கார்டை (நிரந்தர குடியுரிமை அட்டை) பெற்று கொண்டு, அந்நாட்டு குடிமக்களாக மாறுவதும் வழக்கமாகி வருகிறது. 
இந்தியாவில் இருந்து அமெரிக்கா, கனடாவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக இந்தியர்களுக்கு எதிராகவும் இந்திய வம்சாவளியினருக்கு எதிராகவும் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
2024ஆம் ஆண்டில், அமெரிகாகவில் மட்டும் இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் தொழிலதிபர் சுட்டுக்கொலை:
கட்டுமான நிறுவனத்தை சொந்தமாக கொண்டுள்ள பூட்டா சிங் கில் கனடாவின் எட்மன்டன் நகரில் உள்ள கட்டுமான தளத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், “சீக்கிய கோயிலின் முக்கிய நிர்வாகியாக கில் உள்ளார். பஞ்சாபி சமூகத்துடன் வலுவான உறவுகளைக் கொண்டிருந்தார்” என்றார்.
சொகுசு வீடுகளை கட்டி தரும் கில் பில்ட் ஹோம்ஸ் லிமிடெட் நிறுவனம், பூட்டா சிங் கில்லுக்கு சொந்தமானதாகும். இதுகுறித்து காவல்துறை தரப்பு எக்ஸ் தளத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “பொது பாதுகாப்பு குறித்து உடனடி கவலைகள் எதுவும் இல்லை.
கவானாக் Blvd SW மற்றும் 30 அவென்யூ SW பகுதியைத் தவிர்க்குமாறு குடிமக்களைக் காவல்துறை கேட்டுக்கொள்கிறது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். கொலை விசாரணை அதிகாரிகள் இந்த விசாரணையை வழிநடத்துவார்கள். கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.
மற்றொரு பதிவில், “யார் மீதும் இன்னும் சந்தேகம் எழவில்லை” என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. கில் குறித்து நகரின் முன்னாள் கவுன்சிலர் மொஹிந்தர் பங்கா கூறுகையில், “பல ஆண்டுகளாக அவரை எனக்கு தெரியும். கட்டுமான தளத்தில் தனது தொழிலாளர்களை பார்க்க செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
எந்த சூழ்நிலையிலும் உதவி தேவைப்படும் எவருக்கும் உதவ அவர் தயாராக இருப்பார். செயின்ட் ஆல்பர்ட் டிரெயிலில் உள்ள எங்கள் சீக்கியர் கோவிலில் அவர் முக்கிய நிர்வாகியாக இருந்தார்” என்றார்.
கவானாக் பகுதியில் மற்றொருவரும் கொல்லப்பட்டுள்ளார். பட்டப்பகலில் கொல்லப்பட்ட அவர் யார் என்று தெரியவில்லை. 

மேலும் காண

Source link