Indian Cricket Team Semi Final Journey In Under 19 World Cup 2024 Here Know Latest Tamil Sports News

அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது கடைசி சூப்பர் – 6 சுற்று ஆட்டத்தில் நேபாளத்தை 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி தனது முதல் சூப்பர் – 6 சுற்றில் நியூசிலாந்து அணியை 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனை தொடர்ந்து, நேற்றைய நேபாளத்திற்கு எதிரான போட்டியிலும் வெற்றிபெற்று இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணியின் அரையிறுதி பயணம்:
உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி, அடுத்ததாக அரையிறுதியில் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதுவரை இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிபெற்று, வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது. இந்திய அணி முதல் முறையாக வங்கதேசத்தை வீழ்த்தியது. அதன்பிறகு அயர்லாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் நேபாளம் என ஒவ்வொரு அணியாக வேட்டையாடி அரையிறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து, இந்திய அணியை அரையிறுதியில் வீழ்த்துவது தென்னாப்பிரிக்கா அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல, இதுவரை பந்துவீச்சாளர்களுமே சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர்.  இந்திய அணியின் பயணத்தை பார்த்தால், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக இந்திய அணி அயர்லாந்தை 201 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 
இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?
தொடர்ந்து, 3வது போட்டியில்  அமெரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. லீக் சுற்று முடிந்து சூப்பர் -6 க்கு சென்ற இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. அந்த போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம், இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேநேரம், நேற்றைய போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும். 
நேற்றைய போட்டியில் என்ன நடந்தது..? 
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் உதய் சஹாரன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. இந்திய அணி கேப்டன் உதய் சஹாரன் 107 பந்துகளில் 9 பவுண்டரிகள் உதவியுடன் 100 ரன்கள் குவித்தார். அதேசமயம், சச்சின் தாஸ் 101 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 116 ரன்கள் எடுத்தார். 
298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணி களமிறங்கியது. ஆனால் நேபாள பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தொடர்ந்து போராட, பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் பக்கம் திரும்பினர். இதனால் நேபாள அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தீபக் போஹ்ரா மற்றும் அர்ஜின் குமால் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தனர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக செயல்படவில்லை. நேபாளத்தின் 7 பேட்ஸ்மேன்கள் 77 ரன்களுக்குள் பெவிலியன் சென்றனர். நேபாளத்தின் 6 பேட்ஸ்மேன்களால் இரட்டை ரன்களை கடக்க முடியவில்லை.
இந்திய அணி சார்பில் சௌமி பாண்டே 10 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும், அர்ஷின் குல்கர்னி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இது தவிர ராஜ் லிம்பானி, ஆராத்யா சுக்லா, முருகன் அபிஷேக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். 

Source link