Udayanidhi Stalin Says I Don’t Believe In God As Far As I Am Concerned Fishermen Also God | எனக்கு இறை நம்பிக்கை இல்லை; என்னை பொருத்தவரை இவர்கள்தான் கடவுள்

”எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. எவர் ஒருவரு மற்ற ஒருவர்  உயிரை காப்பாற்றுகிறாரோ அவர் தான் கடவுள். இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன்” என  மிக்ஜாம் புயலில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசினார்.
சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ,  மிக்ஜாம் பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணபணிகளை மேற்கொண்ட 1200 மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்  வழங்கி பாராட்டும் விழா நடைபெற்றது. இதில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன்,  மா.சுப்புரமணியன் , சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2015 ஆம் ஆண்டு சென்னை செம்பரம்பாக்கம் ஏரி இரவோடு இரவாக திறந்து விட்ட சமயத்தில் நான் வசித்த சைதைப்பேட்டை பகுதியில் 2 மாடிக்கு மேலாக வெள்ள நீர் சூழ்ந்தது. 3 நாட்கள் மாடியில் தான் இருந்தோம். அப்போது  ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்தான் என்னையும் என் குடும்பத்தினரை மீட்டனர்” என்றார். 
தொடர்ந்து மீனவர்களை பாராட்டி பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 147 மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்கரை கைபற்றி வைத்துள்ளது. அதை மீட்க மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. ராமேஸ்வரம் வரை சென்ற பிரதமர் மீனவர்களை ஏன் சந்திக்கவில்லை. அவர்களின் படகுகளை மீட்க ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை”  என கேள்வி எழுப்பினார்.
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,   ”மழை வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முன்வந்தவர்கள் மீனவர்கள். மீட்பு பணிகளில்  மீனவர்கள்  துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் களத்தில் நின்றோம். உதவி கேட்காமலே உதவி செய்ய முன்வருபவர்கள் மீனவர்கள். ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் மழை வெள்ளத்தில் மக்களை மீட்டவர்கள் மீனவர்கள்” என பாராட்டினார். 
”நேர்மையும் துணிச்சலும் தான் மீனவ மக்களிடம் எனக்கு  பிடித்த விஷயம். நம்பி வந்தவர்களை தோளோடு தோள் நின்று காப்பவர்கள் தான் மீனவர்கள். இன்று மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். 2017ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் ஒடுக்க நினைத்த போது  போராடிய மாணவர்களுக்கு துணை நின்றவர்கள் மீனவர்கள். ஜல்லிக்கட்டு உள்ளவரை மீனவர்கள் புகழ் நிலைத்து இருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரமான படகே  உடைந்தாலும் பரவாயில்லை என மக்களை காப்பாற்றி இருக்கிறீர்கள். மழை வெள்ள பாதிப்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அரசு தயார் செய்துவிடும். ஆனால் அதை மக்களிடம் சேர்த்தது மீனவர்கள். மழை வெள்ள பாதிப்பில் அரசுக்கு நற்பெயர் கிடைக்க காரணம் மீனவர்கள் தான்” என்றார்.
”மீனவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசு திமுக என்று பல்வேறு மீனவர்கள் நல திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. எவர் ஒருவர் மற்ற ஒருவர்  உயிரை காப்பாற்றுகிறாரோ அவர்தான் கடவுள். இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
பின்னர் மீனவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு, உணவு பந்தியில் மீனவர்களுக்கு உணவும் பரிமாறினார். இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட் மீனவர்கள் கலந்து கொண்டனர்..

Source link