Ayodhya Ram Mandir National Award Winning Artisan Kunj Bihari Crafted Diamond Studded Replica Of Temple In 108 Days

Ram Temple Diamond Model : உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
வைரம் பதிக்கப்பட்ட ராமர் கோயில் மாதிரி:
அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கோயிலின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வைரம் பதிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாதிரியை கைவினை கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார். வாரணாசியை சேர்ந்த கைவினை கலைஞர் குஞ்ச் பிகாரி,  ராமர் கோயில் மாதிரியை வடிவமைத்துள்ளார். இதன் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2.5 கிலோ எடையுள்ள ராமர் கோயில் மாதிரியை வடிவமைக்க அந்த கைவினை கலைஞர் 108 நாள்கள் எடுத்து கொண்டுள்ளார்.
வைரத்தை தவிர்த்து தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி கோயில் மாதிரி செய்யப்பட்டுள்ளது. 12 அங்குலம் உயரம், 8 அங்குலம் அகலம், 12 அங்குலம் நீளத்தில் கோயில் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குஞ்ச் பிகாரி கூறுகையில், “ராமர் மீதான அன்பின் காரணமாகவும் பக்தியின் அடையாளமாகவும் கோயில் மாதிரியை செய்தேன்.
கைவினை கலைஞரை வியந்து பார்க்கும் பக்தர்கள்:
குலாபி மீனாகரி கைவினை கலையை பயன்படுத்தி இந்த கோயில் மாதிரியை வடிவமைத்தேன். குலாபி மீனாகரி கலையை பயன்படுத்தி ராமர் கோயிலை வடிவமைத்தது இதுவே முதல்முறை. இந்த கலைப்படைப்பை உருவாக்க 108 நாட்கள் ஆனது. தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்தி இதை செய்துள்ளேன். கோயிலின் மாதிரியில் ராம் லல்லாவின் தங்க சிலையும் உள்ளது.
ராமர் கோயில் மாதிரியை செய்ய நான் மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் சரியாகப் போகவில்லை. ஆனால், இந்த முறை ராமரின் ஆசீர்வாதத்தால் செய்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் முயற்சியால்தான் குலாபி மீனாகரி கலைப் படைப்பு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது.
வாரணாசி கைவினை கலைஞர்களின் தனித்துவமான திறன்களை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்து சொல்லும் நோக்கில் குலாபி மீனாகரியின் நேர்த்தியான கலைப்படைப்புகளை பிரதமரும் உத்தர பிரதேச முதலமைச்சரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அடிக்கடி பரிசுகளாக வழங்குவார்கள்” என்றார்.

Source link