வேலை நிறுத்தம்… போக்குவரத்து ஊழியர்கள் விடுத்த புதிய அறிவிப்பு… அரசுக்கு புதிய சிக்கல்…

தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் பொங்கலுக்கு முன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அண்ணா திமுக உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக, பாமக,நாம் தமிழர் மற்றும் தேமுதிக உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக போக்குவரத்து துறையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழக அரசு அடுத்த 21 நாட்களில் சம்பள பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஓய்வு பெற்ற பணியாளர்களுடைய பண பலன்கள் அனைத்தும் உடனடியாக கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

அரசு தங்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்க வில்லை என்றால், அதிமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் தேமுதிக தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அனைவரும் இணைந்து பொங்கலுக்கு முன்பாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.