Seshu Passes Away: தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சேஷு மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலமானார் சேஷு:
விஜய் தொலைக்காட்சியில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷூ. இதனாலே இவரை லொள்ளு சபா சேஷூ என்று ரசிகர்கள் அழைப்பார்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த சேஷூ கடந்த 2002 ஆம் ஆண்டில் திரைத்துறையில் கால் பதித்தார்.
2002 ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், டிக்கிலோனா, ஏ1, குலு குலு, நாய் சேகர் ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி என ஏகப்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக, அண்மையில் வெளியான ‘வடக்குப்படி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.
இதற்கிடையில், கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சேஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
வயிறு குலுங்க சிரிக்க வைத்த சேஷு:
இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதே நேரத்தில், ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த காமெடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதாவது, லொல்ளு சபா நிகழ்ச்சியில் வெவ்வேறு காமெடி கதாபாத்திரத்தில் சேஷு நடித்திருந்தால், ரசிகர்களை இன்னமும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பது கிழவி வேடத்தில் நடித்தது தான். அதாவது, பாரதி ராஜாவின் ‘மண்வாசனை’ திரைப்படத்தில் காந்திமதி நடித்த கிழவி வேடத்தில் நடித்து, அவரைப்போல கலாய்த்து தள்ளியிருப்பார்.
கிழவி வேடத்தில் நடித்த சேஷூ, அவரைப்போல நடித்து பழமொழி கூறி பிரபலம் அடைந்தார். அதிலும், ”மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய், பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன? என்றும் குடிச்சு போட்ட பாட்டிலை தூக்கி எடைக்கிப் போட்டானாம், எடைக்கி போட்ட பாட்டிலை தூக்கி குடிச்சி போட்டானாம்…அந்த மாதிரியல இருக்கு” என்று இவர் செய்த அலப்பறைகள் பல ஆண்டுகளாக நினைவுகூர வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. மேலும், பல இடங்களில் மீம் மெட்டிரியலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதோடு, சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவரின் காமெடி இன்று வரை பல நேரங்களில் பேசப்பட்டும், மீம் மெட்டிரியலாகவும் உள்ளது. அதாவது, “அச்சச்சோ..அவரா? பயங்கரமானவராச்சே…” என்று இவரது தனித்துவமான மாடுலேஷனில் அசத்தி இருப்பார். திரையில் சிறிய நேரம் என்றாலும், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நேர்த்தியாகவும், தனக்கே உரிய மாடுலேஷனில் கச்சிதமாக நடித்து ரசிர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
பல ஆண்டுகளாக சிறு கதாபாத்திரத்தில் நடித்த சேஷு, அண்மை காலத்தில் தான் இவருக்கு நகைக்சுவை நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்தது. இப்படியான சூழலில், இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண