Villupuram News Traffic Disruption In Villupuram Railway Tunnel Due To Stagnant Rain Water – TNN | விழுப்புரம் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீர்

விழுப்புரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீருடன் கலந்த மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் நகருக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம், காக்குப்பம், எருமணந்தாங்கால், பொய்யப்பாக்கம், பெரியார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்தி தான் விழுப்புரம் நகருக்குள் வந்து செல்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் மூழ்கியிருக்கிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீருடன் கலந்த மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சி அளித்து வருகிறது.
மழைநீர் தேங்கியிருப்பதால் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு அந்த பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 4 கி.மீட்டர் தூரம் சுற்றி விழுப்புரம் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீரை அகற்ற விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை 
வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைப் போல் சென்னை மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. மற்ற அரசு அலுவலகங்களும் பொது சேவை நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
இதுமட்டும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. 
 

Source link