Puthumai Pen Thittam Tanjore district student girl thanks to cm stalin Puthumai Pen scheme


புதுமை பெண் திட்டம் மூலம் பயன்பெற்று வரும் தஞ்சையைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, இந்த மாணவிகளின் கல்லி தடைபடாமல், அவர்களின்  உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டில் தமிழக அரசு புதுமை பெண் திட்டத்தை தொடங்கி வைத்தது.
புதுமை பெண் திட்டம்:
கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், கடந்த 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.
இந்தத் திட்டத்துக்கு புதுமைப் பெண் திட்டம் (Puthumai Penn Thittam) என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால்‌ 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு/ தொழில்நுட்பப் படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌தோறும்‌ 1000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமைபெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை மாதந்தோறும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 
குடிசைவாழ் மாணவிகளுக்கும் தன்னம்பிக்கை:
இச்சூழலில், இந்த திட்டத்தில் மூலம் பயன் பெற்று வரும் தஞ்சையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசு தரப்பில் மாணவி தங்கியிருக்கும் குடிசை வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”ரெங்கநாதபுரம், நடுப்படுகையில் இருக்கிறது ஒரு குடிசை வீடு. குடிசையின் முன்புறத்தில் 100 மீட்டர் தொலைவில் திருமலை ராஜன் ஆறு. மறுபுறம் 400 மீட்டர் தொலைவில் நடாறு. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் உள்ள படுகையில்தான் இந்தக் குடிசை உள்ளது.
இந்தப் படுகையில் ஏறத்தாழ 35 குடும்பங்கள் உள்ளன. இந்தப் படுகை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்டது. இந்தக் குடிசையில் இருந்து பட்டீஸ்வரம் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து சென்றுதான் படிக்க வேண்டும்.
அப்படிச் சென்ற படித்து பன்னிரண்டாம் வகுப்பில் (பிளஸ் டூ) தேர்ச்சி பெற்றவர்தான் பூர்ணா. பூர்ணா, தன் தந்தை பன்னீர்செல்வம், தாய் காமாட்சி, கல்லூரியில் படிக்கும் தம்பி பால சுப்பிரமணியம் ஆகியோருடன் இந்தக் குடிசையில்தான் வாழ்கின்றார். பெற்றோர் இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். பள்ளிப்படிப்பை முடித்து ஏறத்தாழ 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி கணிதப் பாடத்தைத் தேர்வு செய்து படித்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மாணவி:
பட்டீஸ்வரத்திலிருந்து பேருந்தில் கல்லூரிக்குச் செல்கிறார். இந்தப் பூர்ணாவுக்கு மாதம் ரூ.1,000/- (ரூபாய் ஆயிரம்) வங்கி வழியாக நம் திராவிட நாயகரின் கருணை பொங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் சென்று சேர்கிறது. இந்தப் பணம் கிடைத்துள்ளதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடையும் பூரணா, இந்தப் பணம் எனக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. பேருந்து போக்குவரத்துக்கு, நோட்டுப் புத்தகங்கள் வாங்க பயன்படுகிறது.
என் பெற்றோரின் குடும்பச் செலவுக்கும் பயன்படுகிறது. படிக்கும்போதே சம்பாதிப்பது போன்ற உணர்வு எனக்கு வருகிறது. அதைவிட மனதில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. இந்தத் திட்டத்தை உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் இருப்பிடம் நோக்கி என் கரங்கள் குவிந்து நன்றியை செலுத்துகின்றன.
என்னைப் போன்ற இலட்சக்கணக்கான ஏழை மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கருணைத் தெய்வமாகவே காட்சி அளிக்கிறார்கள். அவரை நீடூழி வாழ்க வாழ்க என வாழ்த்திக் கொண்டிருக்கிறோம் மாணவிகள் நாங்கள் -என்று மனம் நெகிழ்ந்து கூறுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் காண

Source link