"குடும்பத்திற்காக அதிகாரம் பெற நினைப்பவர்கள் ஏழைகள் பற்றி யோசிப்பார்களா?" அமித்ஷா கேள்வி

Amit Shah: இந்தியா கூட்டணித் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை முதல்வராக்கவும், பிரதமராக்கவும் நினைக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

"குடும்பக் கட்சிகளின் கூட்டே இந்திய கூட்டணி”

இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் தங்களது வாரிசுகளை தங்கள் கட்சியின் முக்கிய பதவிகளில் வகிக்க விரும்புகிறார்கள். சோனியா காந்தியின் நோக்கம் ராகுல் காந்தியை பிரதமராக்குவது, மம்தா பானர்ஜியின் நோக்கம் அண்ணன் மகனை முதல்வராக்குவது, மு.க.ஸ்டாலினின் நோக்கம் தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவது, உத்தவ் தாக்கரேவின் நோக்கம் மகனை முதல்வராக்குவது தான்.

7 வாரிசு அரசியல்வாதிகளின் குடும்பக் கட்சிகளின் கூட்டே, இந்திய கூட்டணி. இந்திய கூட்டணித் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை பிரதமராக்க நினைக்கிறார்கள். சொந்தக் கட்சியில் ஜனநாயகத்தை காக்க முடியாதவர்களால், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது” என்றார்.

"பயங்கரவாதத்தில் இருந்து நாடு விடுபடும்”

தொடர்ந்து பேசிய அவர், ”பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நினைக்கும் அதே வேளையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் வாரிசுகளை பிரதமராகவும்,  முதல்வராகவும் ஆக்க நினைக்கிறார்கள். தங்கள் குடும்பத்திற்காக அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்கள், ஏழைகளின் நலனைப் பற்றி என்றாவது நினைப்பார்களா?

பாஜகவில் குடும்ப அரசியல் இருந்திருந்தால் டீ விற்றவரின் மகன் பிரதமராக வந்திருக்க முடியாது. இந்திய கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் நாட்டில் ஜனநாயகத்தை அழித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஊழல், சாதிவெறி ஆகியவற்றை ஒழித்து நாட்டை வளர்ச்சிக்கு உழைத்தார் பிரதமர் மோடி.  மோடியின் அடுத்த ஆட்சியில் பயங்கரவாதம், நக்சலிசம் ஆகியவற்றில் இருந்து இந்தியா விடுபட்டு, அமைதியான மற்றும் வளமான நாடாக மாறும் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வருவார் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். மோடி தான் வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மோடி ஆட்சியில் உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு மரியாதையும், அடையாளமும் உருவாகியுள்ளது" என்றார் அமித் ஷா.

மேலும் படிக்க

Fact Check: தமிழ்நாட்டின் முதல் பழங்குடி நீதிபதி ஸ்ரீபதி இல்லையாம்! உண்மை நிலவரம் என்ன?

Source link