Faiz Fazal Retire: ரஞ்சி கிரிக்கெட்டின் ரன்மெஷின்! ஓய்வு பெற்றார் ஃபயஸ் பசல்! யார் இவர்?

ரஞ்சி கிரிக்கெட் அணி இந்தியாவின் மிகவும் பழமையான புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஆகும். ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவதற்கு முன்பு இந்த போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும். ஐ.பி.எல். தொடருக்கு பிறகு ரஞ்சி தொடரில் இருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஃபயஸ் பசல் ஓய்வு:

ரஞ்சி கிரிக்கெட் தொடரின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஃபயஸ் பசல். இவர் நேற்றுடன் ரஞ்சி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். விதர்பா அணிக்காக நீண்ட காலம் ஆடி வந்த பசல், நாக்பூர் மைதானத்தில் நேற்று நடந்த ஹரியானா அணிக்கு எதிரான போட்டியுடன் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பசல் விதர்பா அணியின் வீரராக மட்டுமின்றி விதர்பா அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் உலா வந்தவர்.

1985ம் ஆண்டு மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் பிறந்த ஃபயஸ் யாக்கூப் பசல், இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இவர் விதர்பா அணி, ரயில்வே அணி, இந்தியா 19 வயதுக்குட்பட்டோர் அணி, இந்தியா ரெட், இந்தியா ஏ, மத்திய மண்டல அணி, சென்ட்ரல் அணி, இந்திய அணிக்காக ஆடியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியுள்ளார்.

30 வயதில் இந்திய அணிக்கு அறிமுகம்:

இந்திய அணிக்காக இவர் இதுவரை ஒரே ஒரு நாள் போட்டியில் மட்டும் ஆடியுள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பசல் ஆடியுள்ளார். கடந்த 16 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 30 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஒரே வீரர் பசல் மட்டுமே ஆவார்.

ஜிம்பாப்வே மண்ணில் தனக்கு கிடைத்த அந்த ஒரே வாய்ப்பையும் மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் பசல். 124 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்காக, தொடக்க வீரராக களமிறங்கிய பசல் கே.எல்.ராகுலுடன் இணைந்து அசத்தினார். கே.எல்.ராகுல் ஒருபுறம் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாச மறுமுனையில் பசலும் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசினார். இருவரும் இணைந்து 21.5 ஓவர்களிலே இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். பசல் 61 பந்துகளில் அவுட்டாகாமல் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 55 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் வாய்ப்பு மறுப்பு:

அதன்பின்பு, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. அவர் இந்திய அணிக்காக களமிறங்கியபோது அவருக்கு ஐ.பி.எல். தொடரில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் மிரட்டலான பேட்டிங்கை கொண்டுள்ள பசல், முதல் தர கிரிக்கெட்டில் 137 போட்டிகளில் 233 இன்னிங்சில் ஆடி 24 சதங்கள், 39 அரைசதங்களுடன் 9 ஆயிரத்து 183 ரன்களை எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 113 போட்டிகளில் ஆடி 10 சதங்கள், 22 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 641 ரன்களை எடுத்துள்ளார்.  66 டி20 போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 1273 ரன்களை எடுத்துள்ளார்.

2015-16 ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 714 ரன்களை குவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். 2004ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், அவருக்கு காயம் ஏற்பட்ட காரணமாக அவருக்கு பதில் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தவான் அந்த தொடரிலே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 38 வயதான பசல் தன்னுடைய கடைசி இரண்டு இன்னிங்சில் டக் அவுட்டும், ஒரு ரன்னும் எடுத்தார்.

அவரைப் பற்றி கூறிய விதர்பா அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட், பசல் ஒரு தனித்தவமான வீரர். அவரது கிரிக்கெட் தொழில்நுட்பம் குறைபாடே இல்லாதது. அவர் இந்திய அணிக்காக இன்னும் அதிக போட்டிகள் ஆட தகுதியானவர் என்று புகழாரம் சூடியுள்ளார். ரஞ்சி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பசலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Source link