மொராக்கோவில் நிலநடுக்கம்! 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000 க்கும் மேற்பட்டோராக அதிகரித்துள்ளது.

வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு மொராக்கோ. கால்பந்து அணிக்கு பெயர் போனது, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரை கடலின் எல்லையோரம் அமைந்துள்ள இந்நாடு அரேபிய மற்றும் ஐரோப்பிய கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் முக்கிய நுழைவு வாயிலாக திகழ்கிறது.

மொராக்கோவின் மராக்கேஷ் பகுதியில் இருந்து 75 கிமீ தூரத்தில் அட்லஸ் மலை தொடர் உள்ளது. இதனை ஒட்டிய நகரங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.

அந்நாட்டு புவியியல் துறை அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின் படி ரிட்டர் அளவு 7.2 ஆக பதிவாகியுள்ளது. பலரும் தூக்கத்தில் இருந்த போது கட்டிடங்கள் குலுங்கின. இதில் ஏராளமான வீடுகள் நொடி பொழுதில் நொறுங்கி விழுந்தன.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பலமுறை பின் அதிர்வுகளும் உணரப்பட்டன. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பலரும் சாலைகளில் தஞ்சமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தை கடந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காயமடைந்த அவர்களின் எண்ணிக்கை 1400 க்கும் மேற்பட்டோராக உயர்ந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் படுகாயம் அடைந்தவர்களை சாலையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் வகையில் இந்திய தூதரகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் அழைப்பதற்காக பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி +212 661 129 7491 என்ற எண்ணிற்கு மொராக்கோவில் உள்ள இந்தியர்கள் அழைக்கலாம் என அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.