தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதை, புதுமுக ஹீரோ, ஹீரோயின், அறிமுக இயக்குநர் என புதுமையின் கூட்டணியில் உருவான ஒரு படமாக இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்கள். “ஆத்தாடி பாவாட காத்தாட…” இந்த பாடல் ஞாபகம் இருக்கிறதா. ஆம் இப்பாடல் இடம்பெற்ற ‘பூவிலங்கு’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்து அனுபவம் பெற்ற அமீர்ஜான் அறிமுக இயக்குநராக களம் இறங்கினார். ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட கருப்பு வைரங்களுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் ‘பூவிலங்கு’ படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் முரளி. கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சித்தலிங்கையாவின் மகன் தான் முரளி. 1983ம் ஆண்டு தந்தையின் இயக்கத்தில் வெளியான “பிரேமா பர்வா” என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான முரளிக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து ஒரு சில கன்னட படத்தில் நடித்த முரளியை கே. பாலச்சந்தர் தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். பிரேமா பர்வா படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘பூவிலங்கு’. இப்படம் 1984ம் ஆண்டு வெளியானது.
ஹீரோயினாக அறிமுகமான குயிலி ஏற்கனவே தூங்காதே தம்பி தூங்காதே, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் ‘பூவிலங்கு’ படத்தின் மூலம் தான் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன.
இளையராஜாவின் இசை இப்படத்தை தூக்கி நிறுத்தியது. கதைக் களத்துக்கு ஏற்ற பின்னணி இசை, வைரமுத்துவின் வரிகளுக்கு இசைஞானியின் இசை என அப்படத்தின் பாடல்கள் இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் பிரபலம். அதிலும் ‘ஆத்தாடி பாவாட காத்தாட…’ பாடல் உருவானதற்கு பின்னால் ஒரு ஸ்வாரஸ்யமான கதை உள்ளது. ஹீரோயின் குளிக்கும் இடத்திற்கு ஹீரோ வந்து விட அந்த சந்தோஷத்தில் ஹீரோ பாடும் இந்த பாடலின் வரிகள் மூலம் உணர்வுகளை பொங்கவிட்டனர். இளையராஜா இந்த பாடலுக்கு ட்ராக் மட்டும் பாட முழு பாடலையும் எஸ்.பி.பி பாடுவதாக இருந்தது. ஆனால் இளையராஜாவின் குரலே படத்தின் சூழலுக்கு பொருத்தமாக இருக்கவே அவரையே பாடவைத்தாராம் இயக்குநர். அப்பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஏராளமான படங்கள் மற்றும் தொடர்களில் பிரபலமான நடிகராக விளங்கும் மோகன் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் தான். அதனாலேயே அவர் பூவிலங்கு மோகன் என்ற அடையாளத்துடன் பிரபலமானார்.
மேலும் காண