ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் டிவியில் பல சேனல்களும் புதுப்படங்களை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
அயலான்
நடப்பாண்டு பொங்கலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ”அயலான்” படம் வெளியானது. ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
பொன் ஒன்று கண்டேன்
கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரியா நீண்ட இடைவெளிக்குப் பின் “பொன் ஒன்று கண்டேன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலர்ஸ் டிவியில் ஏப்ரல் 14 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
வடக்குப்பட்டி ராமசாமி
இயக்குநர் கார்த்திக் யோகியுடன் நடிகர் சந்தானம் 2வது முறையாக இணைந்த படம் “வடக்குப்பட்டி ராமசாமி”. இந்த படத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சபா சேஷூ, நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ஜான் விஜய், கூல் சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர் என பலரும் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் காமெடி காட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ஜீ தமிழ் சேனலில் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பகவந்த் கேசரி
அனில் ரவிபுலி இயக்கத்தில் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால், அர்ஜூன் ராம்பால், சரத்குமார், ராகுல் ரவி நடிப்பில் வெளியான படம் “பகவந்த் கேசரி”. வித்தியாசமான திரைக்கதையில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்திய இப்படம் ஜீ தமிழ் சேனலில் ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “மாமன்னன்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விட்டது. ஆனாலும் கலைஞர் டிவிக்கு சேட்டிலைட் உரிமையானது கைமாறியுள்ளது. அதன்படி ஏப்ரல் 14ல் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண