நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் உடன் இணையும் ஜெயிலர் 2 (Jailer 2 Title) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் பக்கா கமர்ஷியல் ஹிட்
இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஜெயிலர்.
ஜெயிலராக வேலை பார்த்து பின் ரிட்டையர் ஆகி பேரன், குடும்பம் என வாழ்ந்து வரும் ரஜினிகாந்த், சிக்கலில் மாட்டிக் கொள்ளும் தன் போலீஸ் மகனை தனக்கு கிடைத்த கேங்ஸ்டர் நட்புகளின் உதவியால் மீட்க, பெரும் ரவுடியை எதிர்த்து போராடும் வகையில் அமைந்த இப்படம், ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், பாடல்கள் என அனைத்தும் சிறப்பாக அமைந்து கமர்ஷியல் ஹிட் அடித்தது.
வசூல் வேட்டை செய்த ஜெயிலர்!
தமன்னா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். வசந்த் ரவி, விநாயகன், ஷிவராஜ் குமார், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, சுனில் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் தன்னுடைய பீஸ்ட் படத் தோல்வியால் கடும் விமர்சனங்களை இணையத்தில் எதிர்கொண்டிருந்த நிலையில், இப்படம் அவருக்கு கம்பேக்காக அமைந்து தமிழ் ரசிகர்கள் தாண்டியும் வரவேற்பைப் பெற்றது.
சன் பிச்சர்ஸ் தயாரித்த இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், சுமார் 650 கோடிகளை வசூலித்து சென்ற ஆண்டு அதிகம் வசூலித்த படமாக உருவெடுத்தது. நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என அழுத்தமாக நிரூபித்த நிலையில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்புகள் சென்ற ஆண்டு முதலே அதிகரித்து வருகின்றன.
ஜெயிலர் 2 டைட்டில்
இதற்கு ஏற்றபடி, சமீபத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்த நடிகை மிர்ணா, நெல்சன் ஜெயிலர் 2 படத்தின் திரைக்கதையை எழுதி வருவதாகவும், தானும் அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வத் தகவலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படத்துக்கு ஹூக்கும் எனப் பெயரிடப்படலாம் என்றும், இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் 2024ஆம் ஆண்டு தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், தலைவர் 171 திரைப்படப் பணிகள் முடிந்ததும் ரஜினிகாந்த் இதில் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் கமர்ஷியல் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக அமைந்த நிலையில், இப்படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காண