vijay tamizhaga vetri kazhagam party tvkSA Chandrasekar | Vijay Vs SA Chandrasekar: விஜய் Vs எஸ்.ஏ. சந்திரசேகர் மோதல்


Vijay Vs SA Chandrasekar: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியலில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டதுடன், ஆரம்ப கால அரசியல் பிரவேசத்தில், விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இருந்த மோதல் குறித்த விவாதம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 
 
அரசியல் கட்சி தொடங்கிய விஜய்:
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அதிகளவில் ரசிகர்களை கொண்டவர். இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பது விவாதமாக மாறியுள்ளது. அதேநேரம், ஆரம்பத்தில் விஜய் அரசியலுக்கு வர அடித்தளமிட்டவர் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான். 
 
முன்னதாக விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பலமுறை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதும், விஜய் பெயரில் அவர் கட்சியை அறித்ததும், அதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரை சென்றதும் விவாதமானது. 1993ம் ஆண்டு விஜய்காக ரசிகர் மன்றத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கினார். சில ஆண்டுகளுக்கு பிறகு அதை நற்பணி மன்றமாக மாற்றினார். பின்னர், அதை விஜய் மக்கள் இயக்கமாக உருவாக்கினார். 25 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
 
தந்தைக்கு எதிராக விஜய்:
 
இந்த சூழலில் தான், 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதாக எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவித்தார். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சுகள் அடிப்பட்ட போது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்து தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்த எஸ். ஏ. சந்திரசேகர் பரப்பை ஏற்படுத்தி இருந்தார். எனினும், விஜய் பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதற்கும், விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அது தனது தனிப்பட்ட விருப்பம் என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் குறிப்பிட்டிருந்தார்.
 
அதேநேரம் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு எதிராக விஜய் வெளியிட்ட அறிக்கையில், தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, ”மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என விஜய் கூறினார்.
 
இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உடனான மோதல் குறித்து ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியிருந்தார். அதில், “ என் குடும்பத்தை பற்றி ஊடகத்தில் பேசும்போது, சில தவறான விஷியங்கள் பரப்பப்படுகிறது. எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மை. அதை எப்போதும் மறுக்க மாட்டேன். ஆனால் விஜய்யும் அவரது தாயும் என் மனைவியுமான ஷோபாவும் எப்போதும் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் எந்த மனகசப்பும் இல்லை, அவர்கள் சந்தோஷமாக சந்திந்துக் கொண்டு இருக்கிறார்கள்” என பேசியிருந்தார். 

 
விஜயகாந்துடன் அரசியலுக்கு வர ஆசைப்பட்ட எஸ்.ஏ.சி:
ஒருமுறை எஸ்.ஏ. சந்திரசேகருடன் விஜய்க்கு இருக்கும் கருத்து வேறுபாடு குறித்து ஷோபா பேசியிருந்தார். அதில், எஸ்.ஏ. சந்திரசேகரின் அரசியல் பயணத்தில் விருப்பம் இல்லாத விஜய் அவருடன் பேசவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் அவரது தந்தையிடம் இருந்தே ஆரம்பித்துள்ளது. திராவிட சித்தாந்தம் கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர் 1990களில் விஜயகாந்துடன் இணைந்து அரசியலுக்கு வரவேண்டியவர்.
 
 
ஆனால், அவரால் விஜயகாந்துடன் இணைந்து பயணிக்க முடியவில்லை. அதனால், தான் விஜயகாந்தை போல் தனது மகனான விஜய் அரசியலில் வளர்ச்சி அடைய வேண்டும் என விரும்பியுள்ளார். எனினும், தனது தந்தையின் அரசியல் நகர்வுக்கு தடையாக இருந்த விஜய், அவரது ஆலோசனை இல்லாமல், தன்னிச்சையாக அரசியலில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் தந்தை விரும்பியபடி அரசியல் களத்தில் குதித்துள்ளார் நடிகர் விஜய். 

மேலும் காண

Source link