Faces Of Ayodhya Movement | Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்: முக்கிய முகங்கள் இவர்கள்தான்!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்திலும் அயோத்தி ராமர் கோயில் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்த தலைவர்கள் குறித்த தொகுப்பை இங்கே  காணலாம்.
மஹந்த் ரகுபர் தாஸ்
அயோத்தி ராமர் கோயிலுக்கான சட்டப் போராட்டத்தின் முதல் திரியை ஏற்றி வைத்தவர் மஹந்த் ரகுபர் தாஸ் என்று நம்பப்படுகிறது. 1885-ல், ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று முதன்முதலாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர் தாஸ். இவரின் மனு வன்முறையை ஏற்படுத்தக்கூடும் என்று 2 முறை நிராகரிக்கப்பட்டது. எனினும் சட்டப் போராட்டத்தின் மூலம் இடப் பிரச்சினையை நீதிமன்றத்தில் முடிவுக்குக் கொண்டு வர முயன்ற முதல் நபர் மஹந்த் ரகுபர் தாஸ் ஆவார்.

பரமஹன்ச ராமச்சந்திர தாஸ்
16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதிக்குள், 1949-ல் ராமரின் சிலைகளை வைத்தவர் பரமஹன்ச ராமச்சந்திர தாஸ் என்று கூறப்படுகிறது. இதை அவரே ஊடகங்களிடம் தெரிவித்து இருந்தார். இதுகுறித்த செய்திக் கட்டுரை 1991ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாளில் வெளியாகி இருந்தது. இந்த செய்கையால் அரசே, சம்பந்தப்பட்ட இடத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவித்து பூட்டி வைத்தது.
அடுத்த ஆண்டே, சர்ச்சைக்குரிய பகுதியில் குழந்தை ராமரை வழிபட வேண்டும் என்று இரண்டாவது முறை மனு தாக்கல் செய்தார் தாஸ். ஆனால் அந்த வழக்கு 1990ஆம் ஆண்டு வாபஸ் பெறப்படும் வரை தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. அதேபோல, 1992 பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் பரமஹன்ச ராமச்சந்திர தாஸ் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

அசோக் சிங்கால்
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அப்போதைய தலைவரான அசோக் சிங்கால், ராமர் ஜென்ம பூமி அமைப்பைத் தொடங்கியவர். 1985-ல் ராமர் ஜானகி ரத யாத்திரையையும் தொடங்கினார். ராமர் ஜென்ம பூமியின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்ற அவரின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, ராமர் ஜென்ம பூமி கர சேவக இயக்கம் தொடங்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று, ஓர் இயக்கத்தையும் தொடங்கினார்.
லால் கிருஷ்ண அத்வானி
எல்.கே.அத்வானி என்று அழைக்கப்படும் லால் கிருஷ்ண அத்வானி ராமர் கோயில் கட்டுவதற்குக் காரணமானவர்களில் முக்கியமானவர். பின்னாளில் துணைப் பிரதமராகவும் உயர்ந்தார். பாஜக தலைவராக இருந்த அத்வானி, 1990-ல் சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு, ராமர் ஜென்ம பூமி ரத யாத்திரையைத் தொடங்கினார். வன்முறை சம்பவங்கள் எதிரொலியாக, அப்போதைய பிஹார் முதல்வர் லாலு பிரசாத் யாதவால் கைது செய்யப்பட்டார்.
1992 டிசம்பர் 5 அன்று, ’பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில், அத்வானி கலந்துகொண்டார்’ என்று குற்றம் சாட்டப்பட்டது.
பாபர் மசூதி அருகே கர சேவகர்கள் இடையே டிசம்பர் 6ஆம் தேதி அன்று அத்வானி பேசும்போது, ’இதுதான் கடைசி தினம்’ என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அவரின் பெயரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தது. ராமர் ஜென்ம பூமி பகுதியை மத்தியப் படையினர் அடைய முடியாத வகையில் சாலைகளை கரசேவகர்கள் மறித்துக்கொள்ள வேண்டும் என்று அத்வானி உத்தரவிட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.
முரளி மனோகர் ஜோஷி
பின்னாட்களில் மத்திய அமைச்சராக மாறிய முரளி மனோகர் ஜோஷி, 1990 ரத யாத்திரையில் அத்வானியின் படைத் தளபதியாக இருந்தவர். அனல் பறக்கும் பேச்சுகளால் அறியப்படும் ஜோஷி, பிறரின் உணர்வுகளைத் தூண்டிவிடுவார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ’’ராமர் கோயில் இப்போது கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று முரளி மனோகர் ஜோஷி, மதுராவில் கர சேவகர்களிடம் பேசினார் என்றும் மசூதியை இடிக்கும்படி கர சேவகர்களைத் தூண்டி விட்டார் என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு முரளி மனோகர் ஜோஷி சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பாஜகவைச் சேர்ந்த உமா பாரதி, பின்னால் இருந்து ஜோஷியைப் பிடித்தவாறே நகைப்பார்.

பிரமோத் மகாஜன்
அத்வானியின் ரத யாத்திரைக்குப் பின்னால் இருந்து மூளையாக செயல்பட்டவர் பிரமோத் மகாஜன். முதலில் பாத யாத்திரையாகத் திட்டமிடப்பட்டிருந்த யாத்திரையை, ரத யாத்திரையாக மாற்றியவர் மகாஜனே.
10 ஆயிரம் கி.மீ. ரத யாத்திரையை பாரதிய ஜன சங்கத்தின் மூத்த தலைவர் தீன தயாள் உபாத்யாய் பிறந்த நாளான செப்.25 அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்.2 ஆகிய இரு தேதிகளை அத்வானிக்குக் குறித்துக் கொடுத்தார். இதில் அத்வானி, செப்.25-ஐத் தேர்வு செய்தார்.
வினய் கதியார்
வினய் கதியார் 1984-ல், ராமர் கோயில் இயக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக பஜ்ரங் தளம் என்னும் அமைப்பை உருவாக்கியவர். பஜ்ரங் தளத்தின் முதன் தலைவரும் அவரே. ராமர் கோயில் இயக்கத்துக்கான அடித்தளத்தை அமைத்ததே தான்தான் என்பார் வினய். கோத்தாரி சகோதரர்கள் சிஆர்பிஎஃப்எஃப் வீரர்களால் கொல்லப்பட்டனர் என்று குற்றம்சாட்டிய வினய், கர சேவகர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டு, வன்முறையைத் தூண்டியது முலாயம் சிங் அரசு என்றும் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
உமா பாரதி
பாஜக தலைவர்களில் ஒருவரும் பின்னாளில் மத்திய அமைச்சராகவும் மாறிய உமா பாரதி, மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் முழக்கமிட்டதாக பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. மசூதி இடிக்கப்படும்போது, ’’பாபர் மசூதியை அழிக்க ஒரேயோர் அடிதான்’’, ‘மசூதியை இடித்துத் தள்ளுங்கள், பாபரின் மகன்களை பாகிஸ்தானுக்கே அனுப்புங்கள்’’, ’’ராமர் வாழ்க என ஜின்னா சொல்கிறார்’’ என்று முழக்கமிட்டதாக நம்பப்படுகிறது.

உமா பாரதியின் சமிக்கைப்படிதான் பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டபடி தொடங்கியது என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரே ஒப்புக்கொண்டபடி, பாபர் மசூதி இடிப்பில் உமா பாரதி முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
கோத்தாரி சகோதரர்கள்
ராம் மற்றும் சரத் கோத்தாரி ஆகிய இருவரும் கர சேவகர்களாக இருந்தவர்கள். இவர்கள்தான் அக்டோபர் 30, 1990-ல் பாபர் மசூதி மீது காவிக் கொடியைக் கட்டிப் பறக்கவிட்டனர் என்று கூறப்படுகிறது. முன்னதாக சுமார் 5 ஆயிரம் பேருடன் இவர்களும் சேர்ந்து சென்று பாபர் மசூதி வளாகத்தை முற்றுகையிட்டனர். கும்பலின் கொந்தளிப்பை அடக்கும் வகையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில், பலர் பலியாகினர்.

Source link