Nathan Lyon: நியூசிலாந்துக்கு எதிராக ஒரே போட்டியில் 10 விக்கெட்கள்! நாதன் லயன் படைத்த சாதனைகள் என்னென்ன?

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் நடந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சிறப்பாக செயல்பட்டார். இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் சிறப்பான பந்துவீச்சால் பல பெரிய சாதனைகளை தனது பெயரில் படைத்துள்ளார். அது என்னவென்று இங்கே பார்ப்போம்..

இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்கள்:

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நாதன் லயன் நான்கு விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 27 ஓவர்கள் வீசிய லயன், 65 ரன்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். இவரால்தான் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக டெஸ்ட்போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்திய 10வது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை நாதன் லயன் பெற்றுள்ளார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய சாதனை:

நியூசிலாந்து மண்ணில் ஒரு சுழற்பந்து வீச்சாளர்ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்தியது 2006க்கு பிறகு இதுவே முதல்முறை. கடந்த 2006ம் ஆண்டு இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடந்தது. அந்த போட்டியில் டேனியல் வெட்டோரி மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தலா 10 விக்கெட்களை வீழ்த்தினார். தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் நாதன் லயன்.

டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் இலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத்தை பின்னுக்குதள்ளி நாதன் லயன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் லயன் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹெராத் 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் ஷேன் வார்னே 138 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:

ஷேன் வார்னே – 138 விக்கெட்டுகள்

நாதன் லயன் – 119 விக்கெட்டுகள்

ரங்கனா ஹெராத் – 115 விக்கெட்கள்

முத்தையா முரளிதரன் – 106 விக்கெட்கள்

கிளென் மெக்ராத் – 103 விக்கெட்டுகள்

கோர்ட்னி வால்ஷை பின்னுக்கு தள்ளிய நாதன் லயன்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில், நாதன் லயன் தனது வாழ்க்கையில் 519 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறந்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் கோர்ட்னி வால்ஷை பின்னுக்குத் தள்ளியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பு, டெஸ்ட் கிரிக்கெட்டில் லயன் தனது பெயரில் 517 விக்கெட்டுகளை பெற்றிருந்தார். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளது. 128 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இப்போது லயனின் அடுத்த இலக்கு தனது டெஸ்ட் வாழ்க்கையில் 563 விக்கெட்டுகளை வீழ்த்திய கிளென் மெக்ராத்.

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு போட்டியின் போது 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பெயரில் உள்ளது. லயன் இந்த சாதனையை மூன்று முறை சாதித்துள்ளார்.

Source link