80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ஜான்வி கபூர் தற்போது ‘தேவாரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக நடிக்க உள்ளார். அவரின் இரண்டாவது மகள் குஷி கபூர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘ தி ஆர்ச்சீஸ்’ மூலம் நடிகையாக அறிமுகமானார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போனி கபூர் தன்னுடைய மனைவி ஸ்ரீதேவி பற்றிய தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
போனி கபூர் கையில் ராக்கி கட்ட சொன்ன தாய்:
தயாரிப்பாளர் போனி கபூர் முதல் மனைவி மோனா ஷோரி இருக்கும் போதே அவருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் உறவு பற்றி முதல் மனைவி மோனாவுக்கு தெரிந்து இருந்தாலும் போனி கபூரின் அம்மா நிர்மல் கபூருக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது.
வட இந்தியாவில், ராக்கி என்ற ரக்ஷா பந்தன் தினத்தன்று சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் கையில் ராக்கி கட்டிவிடுவார்கள். அந்த சமயத்தில் ஸ்ரீதேவிக்கு அந்த சம்பிரதாயம் பற்றி தெரியவில்லை. ஸ்ரீதேவியிடம் ராக்கியுடன் கூடிய பூஜை தட்டை கொடுத்து ராக்கி கட்ட சொல்லியுள்ளார் போனி கபூர் அம்மா. உடனே ஸ்ரீதேவி ரூமுக்குள் ஓடி விட்டாள். அவளை நான் சென்று சமாதானம் செய்தேன். ராக்கியை இங்கேயே வைத்து கொள் என சொல்லி விட்டு வந்தேன் என தெரிவித்து இருந்தார் போனி கபூர்.
மேலும் போனி கபூர் பேசுகையில் நான் என்னுடைய மனைவி ஷோரியிடம் என்றுமே நேர்மையாக இருந்துள்ளேன். ஸ்ரீதேவி மீது எனக்கு இருந்த உணர்வு குறித்து அவருக்கு மிகவும் நன்றாகவே தெரியும். திருமணத்திற்கு முன்பே ஸ்ரீதேவி போனி கபூர் வீட்டில் தங்கி இருந்தார். அவள் என்னை நினைத்து கவலை பட்டதை என்னால் பார்க்க முடிந்தது. அதை நான் நிராகரிக்க மாட்டேன் என பேசி இருந்தார் போனி கபூர்.
இரண்டு மனைவிகளும் உயிரிழப்பு:
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஷோரி 48வது வயதில் உயிரிழந்தார். அவர் இறந்த ஆறே ஆண்டுகளில் போனி கபூர் இரண்டாவது மனைவியான நடிகை ஸ்ரீதேவியும் உயிரிழந்தார். 2018ம் துபாயில் ஹோட்டலில் தங்கி இருந்த ஸ்ரீதேவி பாத் டப்பில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையின் படி அவர் நீரில் மூழ்கி இறந்ததாக கண்டறியப்பட்டது.
தற்போது போனி கபூர் அடுத்தடுத்த படங்களை தயாரிப்பதில் பிஸியாக ஈடுபட்டுள்ளார். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் பிரியாமணி, பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் மற்றும் கஜராஜ் ராவ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் காண