உங்களது தொலைபேசி எண்ணை துண்டித்து விடுவோம் என கூறி யாரேனும் மிரட்டினால் பயப்பட வேண்டாம் என்றும் புகார் தெரிவிக்குமாறும் தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை:
போலியான அழைப்புகள் குறித்து சமீபத்தில் புகார் வருவதாக கூறி தொலைத்தொடர்புத் துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டதாவது, சிலர் தொலைத்தொடர்பு துறையினர் பேசுகிறோம் என கூறி, மக்களுக்கு வாட்சப் எண் வழியாகவோ, செல்போன் எண் வழியாக அழைக்கின்றனர்.
பின்னர், உங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் என்றும் உங்களது செல்பேசி எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பின்னர், இது தொடர்பாக பேசி பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர் என்பது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறைக்கு புகார் வந்துள்ளது.
மேலும் அரசு அலுவலர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்து ,மக்களை ஏமாற்ற வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்தும் தொலைத் தொடர்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது. சில தருணங்களில் காதல் போன்ற ஆசை வார்த்தைகள் கூறியும் ஏமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆகையால், இது போன்ற அழைப்புகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள், சைபர் குற்றம் / நிதி மோசடிகளை செய்ய அச்சுறுத்தவும் தனிப்பட்ட தகவல்களை திருடவும் முயற்சிக்கின்றனர்.
தகவலை பகிர வேண்டாம்:
தொலைத்தொடர்பு துறை தனது சார்பாக இதுபோன்ற அழைப்பைச் செய்ய யாருக்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தலகள் வழங்குகிறோம். மேலும், இதுபோன்ற அழைப்புகளைப் பெறும்போது எந்தத் தகவலையும், பணம் உள்ளிட்டவற்றை அனுப்புவதோ, ஏடிஎம் அட்டையின் எண்ணையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதுபோன்ற மோசடி தகவல்தொடர்புகளை சஞ்சார் சாத்தி போர்ட்டலின் (www.sancharsaathi.gov.in) சந்தேகத்திற்குரிய மோசடி தகவல் தொடர்புகள்’ என்ற பிரிவில் புகார் அளிக்குமாறு தொலைத்தொடர்பு துறை குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.
சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள் போன்றவற்றுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், இதுபோன்ற முன்கூட்டிய தகவல்கள் தொலைத் தொடர்புத் துறைக்கு உதவுகின்றன.
என்ன செய்ய வேண்டும்?
மேலும், குடிமக்கள் தங்கள் பெயரில் உள்ள செல்போன் இணைப்புகளை சஞ்சார் சாத்தி போர்ட்டலின் (www.sancharsaathi.gov.in) ‘உங்கள் செல்பேசி இணைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிக்கு ஆளாகியிருந்தால் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளிக்குமாறு தொலைத் தொடர்புத் துறை குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Also Read: Phone Tapping Row: உங்க ஃபோன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? ஒட்டுக் கேட்கப்படுகிறதா என உறுதி செய்வது எப்படி?